பாஜகவை பற்றி கவலைப்படாதீங்க முதல்வரே… ஹாட்ரிக் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : வானதி சீனிவாசன் சுளீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 1:24 pm

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள்” என, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக என்ற அரசியல் கட்சி தொடங்கிய காலம் முதலே, எங்களைப் பார்த்து இந்தியாவை மிரள்கிறது. நேருவின் தூக்கத்தையே கெடுத்து விட்டோம் என்று வெறும் வார்த்தை ஜால அரசியலைத்தான் செய்து வருகிறது.

பொய்யும், புரட்டும் நொடிக்கு நொடி அம்பலத்திற்கு வந்து விடும் இந்த தொழில்நுட்ப யுகத்திலும், இந்த வெற்றுக் கூச்சல் அரசியலை திமுக கைவிடவில்லை என்பதையும் ஸ்டாலினின் பேட்டி உணர்த்துகிறது.
தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து இமயம் முதல் குமரி வரை வெற்றிகளை குவித்து வரும் பாஜக ஏன் பயப்பட வேண்டும்? புதுச்சேரி உள்பட 40 தொகுதிகள் இருந்தாலும் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவே முடியாது.
இப்படிப்பட்ட கட்சியைப் பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் 450 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பெரிய அரசியல் கட்சியான பாஜகவுக்கு என்ன பயம் இருக்கப் போகிறது?

பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் ஏற்கனவே பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்தான். எனவே, அவர்கள் கூடிப் பேசியதால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவது இல்லை. பீகாரில் திமுகவோ, தமிழ்நாட்டில் ராஷ்ட்டீரிய ஜனதாதளமோ போட்டியிட முடியாது.

பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளத்தில் கூட்டணி வைக்க முடியுமா? பாட்னா கூட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து திமுக மட்டுமே கலந்து கொண்டுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் இருந்து சமாஜ்வாடி மட்டுமே கலந்து கொண்டுள்ளது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் பிளவுபட்டதுடன், இந்துத்துவ வாக்கு வங்கியையும் இழந்துள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? இப்போதும் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டுள்ளது.

பீகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் நாளுக்குநாள் கரைந்து வருவதால், அக்கட்சிக்கு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி எத்தனை தொகுதிகள் ஒதுக்கப் போகிறாரோ தெரியவில்லை. மேற்குவங்கத்தின் நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறிவிட்டார். பாட்னா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸுக்கு கதவை அடைத்து விட்டார். எனவே, இப்படிப்பட்ட கட்சிகள் ஓரணியில் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? அதனால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 15 தொகுதிகளை கேட்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்பதுடன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதனால் திமுக 15 அல்லது 16 தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் கருணாநிதி மகள், பேரன், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் மகன்கள், மகள்தான் போட்டியிடப் போகிறார்கள்.

எனவே, பாஜகவை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, திமுகவைப் பற்றி ஸ்டாலின் அவர்கள் கவலைப்படுவதே சரியாக இருக்கும். ஏனெனில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!