திமுக கொடிக்கம்பம் நடலாமா…?உயிரோடு விளையாடாதீங்க… பிறந்த நாள் கொண்டாட்டத்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிளம்பிய புது நெருக்கடி…!!!

Author: Babu Lakshmanan
2 March 2022, 5:40 pm
Quick Share

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடிய நேற்றைய தினத்தில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல் என்று பெரும்பாலான தலைவர்கள் வாழ்த்தும் தெரிவித்தனர்.

கொலை செய்ய நினைக்கிறீர்களா..?

இந்த நிலையில்தான் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அடுத்தடுத்து போட்ட ட்வீட்கள் திமுகவினரை பெரிதும் கொந்தளிக்க வைத்துள்ளது. அந்தப் பதிவுகளில் சில புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார். அதுதான் திமுகவினரின் கோபத்துக்கு காரணமாகிவிட்டது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பிறந்த நாளுக்கு உங்கள் தொண்டர்கள் பொதுமக்களை கொலை செய்து விளையாடலாம் என்று நினைக்கிறார்களா? இதற்கு சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் ஆதரவா?? இடம்: டிடிகே ரோடு” என்று
குறிப்பிட்டு இருந்தார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு ட்விட்டையும் அவர் பதிவு செய்தார். அதில் கோவையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பேனரில் மோதி பலியான இன்ஜினியர் ரகுவின் சகோதரி, “இந்த பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று வேதனையுடன் மனம் குமுறி கூறியிருந்த பேட்டியை நினைவுபடுத்தும் விதமாக,
“இவர்கள் இறப்புகளை இன்று நினைவு கூர்வோம். இனி இது நடக்காமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. கொடிக் கம்பம், பேனர் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தானவை என்பதை அரசியல் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் உணர வேண்டும்!” என்றும் கவலை தெரிவித்திருந்தார்.

அறப்போர் இயக்கத்திற்கு விமர்சனம்

ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு கூடவே விமர்சனம் செய்தது திமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மிகுந்த ஆவேசத்துடன் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரை வசை பாடியுள்ளனர்.

தவறை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அதே பதிவில் தவறையும் விமர்சிப்பது என்ன நாகரீகம்? என்று அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர், ஒரே பதிவில் வாழ்த்தும் சொல்லிவிட்டு கொலை என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருப்பதற்கு, நீங்கள் வாழ்த்து சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று நக்கலாக சாடியுள்ளனர்.

இன்னொருவர், ஒருபடி மேலே சென்று ஜெயராம் வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில், “Yes, அடிப்படை நாகரீகம் தெரியாத வாழ்த்து சொல்லும் முறைமை தெரியாத, எப்போதும் குற்றம் மட்டுமே கண்ணுக்குத்தெரியும் அறப்போர் அக்கப்போர் மன நோயாளிகள் தனித்தனியாக ட்விட் போட்டிருக்கலாம். என்று நையாண்டி செய்தும் இருந்தார்.

இதனால் தனது பதிவுகள் திமுகவினரின் மனதை ரொம்பவே நோகச் செய்துவிட்டது என்பதை உணர்ந்த ஜெயராம் வெங்கடேசன் நேற்று நள்ளிரவு படத்துடன் மீண்டும் ஒரு பதிவை போட்டார். அதில் “இப்படியா கொடிக்கம்பம் நடுவாங்க முதலமைச்சர் ?… “என்று நாசூக்காக ஒரு கேள்வியும் எழுப்பியிருந்தார்.

என்றபோதிலும் திமுகவினர் அவரை விடவில்லை. தங்களது தலைவர் பிறந்த நாளில் இதுபோன்ற பதிவுகளை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலர் மிரட்டலும் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஜெயராம் வெங்கடேசன் தனது பதிவுகளை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.

காணாமல் போன உத்தரவாதம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திமுகவினர் சாலையின் இருபக்கமும் வழிநெடுக திமுக கொடிக் கம்பங்களை ஊன்றியது பற்றி வேதனை தெரிவித்திருப்பது நியாயமான ஒன்றுதான். ஆனால் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு மட்டும் ஜெயராம் வெங்கடேசன் அதை நிறுத்திக் கொண்டிருக்கவேண்டும். பேனர் இறப்புகள் பற்றி அவர் தனியாக ட்விட் போட்டிருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் வசிக்கும் பகுதி சாலையிலேயே திமுகவினர் கொடிக் கம்பங்களை ஊன்றியதுதான் அவருடைய மனக் குமறலுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் இருந்து கோவை திரும்பிய இன்ஜினியர் ரகு, மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை அருகே வீடு திரும்பிக்கொண்டிருந்த இன்ஜினீயர் சுபஸ்ரீ, இருவர் இறப்பிற்கும் அதிமுகவினர் வைத்த பேனர்கள்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்கள் இந்த பேனர்கள் மீது மோதித்தான் இருவரும் பலியானார்கள் என்ற செய்தி ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் அப்போது பேசப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அதை தனக்கு சாதக பிரச்சாரமாகவும் பயன்படுத்தி கொண்டது.

High Court -Updatenews360

தவிர இது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திமுகவினர் யாரும் இனிமேல் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாட்டார்கள், கொடிக்கம்பம் நடமாட்டார்கள் என்று கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவாதமும் அளித்தது.

ஆனால் இப்படி கோர்ட்டில் உறுதியளித்த அடுத்த மாதமே விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக 13 வயது சிறுவன் தினேஷ் சாலையில் திமுக கொடிக்கம்பம் நட்டபோது அதன் மேற்பகுதி அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில்பட்டு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு மாவட்ட திமுக சார்பில் இழப்பீடாக 1.5 லட்ச ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த வேதனையுடன், “பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

காற்றில் பறந்த உத்தரவு

இந்த சம்பவத்திற்கு பிறகு கட்அவுட், ப்ளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை பொது இடங்களில் வைக்கக்கூடாது என்று திமுக தலைமை தனது கட்சியினருக்கு மீண்டும் கடும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் கூட இந்த ஆண்டு ஸ்டாலின் பிறந்த நாளன்று திமுகவினர் அதையும் மீறி பொது இடங்களில் திமுக கொடி கம்பங்களை ஊன்றி இருக்கிறார்கள். இதை சுட்டிக்காட்டும் விதமாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் திமுகவினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதனால்தான், தனது ஒரே பதிவில் இரண்டு விஷயங்களை சொல்லப் போய் அவர் திமுகவினரிடம் சிக்கிக் கொண்டும் விட்டார். என்றபோதிலும் அவர் தகுந்த ஆதாரங்களுடன் புகைப்படங்களையும் இணைத்து இருப்பதால் திமுகவினரால் தங்களுடைய கோபத்தை ஜெயராம் வெங்கடேசன் மீது கடுமையாக காட்ட முடியவில்லை” என்று அந்த சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 603

0

0