அதிமுகவில் வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரம்.. மறைமுகமாக சீண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 2:40 pm

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரத்தை கிளப்பியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கட்டாயம் உருவாக்கப்படும் என்று இபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதனால், கூட்டம் முடிவடைவதற்கு முன்பே, ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மறைமுகமாக அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது ;- இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டு உள்ளோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம், எனக் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?