தேர்தல் பத்திரம் ரத்து… உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும் ; CM ஸ்டாலின் கருத்து..!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 4:05 pm

தேர்தல் பத்திரம் முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையில் பல்வேறு மதிப்புகளி தேர்தல் பத்திரங்கள் அங்கீரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கலாம். இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதோடு, 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை ஏப்ரல் 13ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில், “தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது சரியானதுதான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும். அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம், சமநிலையை மீட்டெடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு,” என்றார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை 2021 முதல் ஆட்சியில் இருக்கும் திமுக, 2019-2020 முதல் 2022-2023 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.628.50 கோடி நன்கொடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?