திராவிட மாடல் வார்த்தை வேணாம்… தமிழகம் அமைதி பூங்கா கிடையாதா..? ஆளுநரின் செயலால் அப்செட்டான முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 12:00 pm

சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்த்திய உரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது உரையை தமிழில் தொடங்கிய ஆளுநர் ஆர்என் ரவி, அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.

ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும். புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் உள்ளது.

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும், என அறிவித்தார். இறுதியில் வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரது உரையில், 3ம் பக்கத்தில் இருந்த ‘திராவிட மாடல்’எனும் வார்த்தையை தவிர்த்தார் ஆளுநர் ஆர்என் ரவி. அதேபோல, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாகத் திகழ்கிறது, இதனால், பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பகுதியில், ஆளுநர் அமைதிப் பூங்கா என்னும் வார்த்தையை தவிர்த்தார்.

இதையடுத்து, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அதாவது, தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; அரசு தயாரித்த ஆளுநர் உரையை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும், எனக் கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். அதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!