எதிர்கட்சிகளோடு கைகோர்த்த கூட்டணி கட்சிகள்… பின்வாங்கிய தமிழக அரசு ; 12 மணிநேர வேலை சட்ட மசோதா வாபஸ்

Author: Babu Lakshmanan
1 May 2023, 10:50 am
Quick Share

கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு வாபஸ் வாங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், 12 மணிநேர வேலை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு வாபஸ் வாங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன். இது தொடர்பாக அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது. இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன், எனக் கூறினார்.

Views: - 335

0

0