‘நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அரசியல் செய்யாதீங்க’…ஆளுநர் கான்வாய் மீது கொடி வீச்சா?: விளக்கம் அளித்த முதலமைச்சர்..!!

Author: Rajesh
20 April 2022, 3:40 pm

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கான்வாய் மீது கொடி வீசப்பட்டதாக கூறி அரசியல் செய்ய வேண்டாமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் ஆளுநர் கான்வாய் மீது கொடி வீசப்படவில்லை என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக.,வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

ஆளுநர் கான்வாய் மீது கறுப்பு கொடி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விரிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆளுநரின் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களில் கற்களோ, கொடிகளோ விழுந்து பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தை திட்டமிட்டு அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் இருவரும் ஒன்றாக அறிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் திட்டமிட்டு தனித்தனியாக அறிக்கை கொடுத்துள்ளனர். மயிலாடுதுறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன. கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. போலீசார் தடுப்புகள் அமைத்து, போராட்டக்காரர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது தான் உண்மை. ஆளுநர் பாதுகாப்பில் அரசு முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை பயன்படுத்தி, ஆளுநர் மூலம் அரசியல் செய்யலாம் என பழனிசாமி நினைக்கிறார். இது நடக்கவே நடக்காது. சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது. ஆளுநர் சென்னா ரெட்டி மற்றும் அவரது கான்வாய் ஆபத்தான நிலையில் 15 நிமிடங்கள் சாலையில் நின்றது . அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் கட்டைகள், கற்களை வீசி தாக்கினர்.

ஆளுநர் உயிர் தப்பினார் என பத்திரிகைகளில் தலைப்பு செய்தி வெளியானது. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியே வர முடியவில்லை. இது தான் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன்சாமி அசிங்கபடுத்தப்பது எந்த ஆட்சியில்? பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது எந்த ஆட்சியில்?

போராட்டத்தின் போது, தூசு விளாதவாறு ஆளுநர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது ஆட்சியில் கல், முட்டை, தக்காளி, வீசியதை நினைவில் வைத்து நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!