திமுக கவுன்சிலருக்கு பதிலாக அலுவலக இருக்கையில் அமர்ந்து கணவர் ஆய்வு… அதிகார தோரணையில் பேசியதால் தொழிலாளர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
22 September 2022, 10:35 am
Quick Share

திமுக கவுன்சலரின் கணவர் சுகாதார அலுவலகத்திற்கு வந்து சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி 61வது வார்டில் கிழக்கு மண்டலத்தில் பணி புரியும் பணியாளர்களின் வருகை பதிவேட்டை மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி அவர்களின் கணவர் திராவிட மணி. இவர் நேற்று அதிகாலை 6 மணி அளவில் சுகாதார அலுவலகத்திற்கு வந்து சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். பணியாளர்களை எந்தெந்த இடத்திற்கு நீங்கள் பணி செய்ய வேண்டும் என்றும்..? யார் எந்த பணியாளர்கள் பணி புரியும் இடத்தில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஆள் பற்றாக்குறை உள்ள சூழலில், நான் சொல்லும் வேலைகளை தான் செய்ய வேண்டும் என்று திமுக கவுன்சிலரின் கணவர் பேசியது மிகவும் வேதனை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுக கவுன்சிலரின் கணவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்றும்..? இவர் சுகாதார ஆய்வாளரா..? அல்லது மண்டல ஆய்வாளரா..? இல்லை உதவி ஆணையாளரா? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், எங்களிடம் வந்து அதிகார தோரணையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும், கோவை மாநகராட்சியில் உள்ள வார்டுகளிலும் இதுபோன்று கவுன்சிலர்களின் கணவர்கள் அதிகாரம் செய்யாமல் இருப்பதை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஏற்கனவே, கவுன்சிலரின் கணவர்கள், அதிகாரங்களில் தலையிட விடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ, அவரது உத்தரவை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Views: - 413

0

0