கோவையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்று விளையாடும் காளைகள்…மல்லுக்கட்டும் காளையர்கள்!!

Author: Rajesh
21 January 2022, 9:40 am
Quick Share

‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருது பாருடா…. எப்பா அமைச்சர் வர நேரமாயிருச்சு.. எல்லாம் ரெடியா இருங்க.. ஜல்லிக்கட்டுக்கே உரிய கமெண்ட்ரிகளோடு காலை ஏழு மணிக்கு ஆரவாரத்துடன் தொடங்கியது கோவை ஜல்லிக்கட்டு.

கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார். மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெறுகிறது.

“ஏய் யப்பா மாட்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சைக்கிளு… மாடு சுத்துனா மேக்கொண்டு பரிசுப்பா… பிடிக்கிறவங்க புடிச்சிக்கங்க….” என்ற கமெண்ட்ரிகள் ஒருபுறம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
‘’ஒரு வெள்ளிக்காசுபா… இன்னும் சற்று நேரத்தில் ஒரு தங்கக் காசுப்பா. அந்த அளவிற்கு ஆட்டம் காண்பித்தன காளைகள்.

முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், அங்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டிருந்தார்.அதன் படி சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டி போட்டி தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு தொடங்கிய 2 மணி நேரத்தில் 221 காளைகள் களமிறக்கி விடப்பட்டன.

Views: - 545

0

0