ஓட்டுக்காக ஒரு மதத்துக்கு வாழ்த்து.. இன்னொரு மதத்துக்கு வாழ்த்தில்ல : முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் சாடல்!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 2:00 pm

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் ‘விருட்சம்’ எனும் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் பேசியதாவது,’கடந்த ஒரு வருடமாக விருட்சம் எனும் திட்டத்தில் பள்ளிகளில் மியவாக்கி முறையில் காடுகளை உருவாக்கி வருகிறோம்.

இன்று இப்பள்ளியில் இத்திட்டத்தை துவங்கியுள்ளோம். கோவை தெற்கு தொகுதிக்கு 1000 மரக்கன்றுகளை மாநில வனத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியை இப்பள்ளியின் பசுமைப்படை மாணவர்களோடு இணைந்து நடவுள்ளோம்.

பிரதமர் மோடி அம்மாவின் பெயரில் மரம் நடுதல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தாயின் பெயரில் மரம் நடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.புவி வெப்பம் அடைவதை தடுக்க காடுகளை உருவாக்குவது, மரம் நடுதல் உள்ளிட்ட பல சுற்று சூழல் நிகழ்வுகளை கோவை தெற்கு தொகுதியில் செய்து வருகிறோம்.

மத்திய நிதி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் 15 மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு தொழில் அமைப்பினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.

சிறு குறு தொழில்துறையினர், ஜவுளி மற்றும் விவசாயத் துறையினர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறையாக இது போன்ற நிகழ்ச்சி கோவையில் நடத்தப்படுகிறது.

இதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கோவை மக்கள் சேவை மையம் மூலம் ஏழை பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கியுள்ளோம்.

அவர்களில் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெறும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாளை கலந்து கொள்வார்’ என தெரிவித்தார்.

விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர், மது ஒழிப்பிற்காக பாஜக சார்பில் தமிழகத்தில் பல மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

திருமாவிற்கு கூட்டணியில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. பட்டியலினம் சார்த பிரச்சனைகள், பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து விசிக புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது கூட்டணியில் உள்ள திமுகவிற்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக தான் இதை பார்க்கிறோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக அதிக வேலை செய்வது பாஜக தான் என கூறினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் இருந்தால் வரவேற்கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு ஆட்சிக்காலத்திலும் உதவி செய்து வருகிறார்.

புதிய திட்டங்களை கோவைக்கு அவர் தந்துள்ளார். குறிப்பாக அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கோவையில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்தினார்.

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கோவை மாவட்டம் முன்னேறி வருகிறது. GST பிரச்சனை என்றாலே மோடி தான் காரணம் என்கிறார்கள்.

இது மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செய்வது. எல்லா பிரச்சனைகளையும் மத்திய அரசு மீது சொல்லும் போக்கு உள்ளது. இதை சரிசெய்யவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழக பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவாகி வருகிறது. கடந்த தேர்தலில், பலமான கட்சிகளை பின்னுக்கு தள்ளி பல இடங்களில் பாஜக முன்னிலையில் வந்துள்ளது.

உறுப்பினர் சேர்க்கையில் இளைஞர்கள், பெண்கள் விருப்பமாக சேர்ந்து வருகின்றனர். GST கவுன்சிலுக்கு தலைமை மத்திய அரசு என்றாலும். மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலோடு தான் வரி அமல்படுத்தப்படுகிறது.

கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்குவிப்பதில் தவறில்லை. இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட் கேபிடல் கோவை தான். இது கவனிக்கப்படாமல் உள்ளது. கோவைக்கும் கார்பந்தயங்கள் வந்தால் வரவேற்கிறோம்.

இதனால் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்க கூடாது. மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அரசு நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சர் மணிப்பூர் விவகாரத்தை தீவரமாக கண்காணித்து வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. பெண்களின் மீதும் முதியவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக கல்லூரிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் நடைபெறுவதாக தொடர்ச்சியாக புகார் வருகிறது.

தங்களது அடையாளங்களை வெளியே தெரியாமல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு இரண்டு விதமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சிறுபான்மை என்றால் ஒரு நிலையை எடுக்கிறது.

விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறவில்லை. வாக்கு வங்கிக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு வாழ்த்து கூறுகிறார். ராகுல் காந்தி அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவிலும் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி வருகிறார் என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?