கௌமுத்ரா சர்ச்சையில் திமுக எம்பி… பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் கடும் எதிர்ப்பு ; உடனே மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
5 December 2023, 7:24 pm

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இது தொடர்பாக திமுக எம்பி செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அவர் கூறியதாவது :- இந்தி இதயப் பகுதியாக இருக்கும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. அதாவது, ‘கௌ முத்ரா’ என அழைக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே பாஜக தேர்தல்களில் வெற்றி பெறும். தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது, எனக் கூறினார்.

இந்தி இதயப் பகுதி மாநிலங்களை கௌ முத்ரா மாநிலங்கள் என்று திமுக எம்பி குறிப்பிட்டு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். திமுகவினரின் இதுபோன்ற ஆணவ பேச்சுக்களே, அக்கட்சி அழிந்து போக முக்கிய காரணமாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, பாஜகஎம்எல்ஏ வானதி சீனிவாசனும் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் கருத்து போட்டிருந்தார். அதாவது, நாடாளுமன்றத்தில் கௌமுத்ரா குறித்து அவதூறு பேசியிருப்பது நமது ஜனநாயகத்தின் கருப்பு நாள். புல்வாமா தாக்குதலின் போது, ​​பயங்கரவாதிகள் இந்துக்களுக்கு எதிராக அதே அவதூறுகளைப் பயன்படுத்தினார்கள், இன்று அது பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலித்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும், திமுக எம்பி செந்தில்குமாருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக எம்பி செந்தில்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது வார்த்தைகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, மக்களவையின் காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பியின் செந்தில்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவரது தனிப்பட்ட கருத்திற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும், கோ-மாதாவை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறிய அவர், இது தொடர்பாக வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கௌமுத்ரா குறித்து திமுக எம்பி செந்தில்குமாரின் பேச்சு தற்போது சர்ச்சையான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இது திமுகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?