இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்… மார்தட்டும் கேஎஸ் அழகிரி!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 8:56 am

இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் எனவும், காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது எனக் கூறுபவர்களுக்கு மாலைக்கண் நோய் உள்ளது எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நூல் விலை ஏற்றம் காரணமாக விசைத்தறி வைத்திருப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு விசைத்தறி கூடங்கள் மூடிய நிலையில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களுக்கு வரி அதிகரித்துள்ளது எனவும், தவறான ஏற்றுமதி கொள்கையால் நாட்டில் பருத்தி தட்டுப்பாடு உருவானதாகவும் குற்றம் சாட்டினார்.

இரண்டு ரூபாய்க்கு காங்கிரஸ் அரசு அரிசி வழங்கிய நிலையில் தற்போது அரிசிக்கு பாஜக அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது எனவும், இவர்கள் விதித்துள்ள வரி அனைத்துமே ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது எனவும் விமர்சித்தார்.

தமிழகத்தில் மின்சார உயர்வுக்கு மத்திய அரசின் உதய் திட்டம் தான் காரணம் எனவும், அதிமுக அரசு அதை ஏற்றுக் கொண்டதால் தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாகவும் குறை கூறினார். இலவச மின்சாரத்தை பொதுமக்களுக்கு தரக்கூடாது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் எனவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊசி வெடி போல விளம்பரத்துக்காக குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக இந்திய ஒன்றிய நாட்டுப்பண் இசைக்கும் என நெறியாளர் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேஎஸ் அழகிரி, யூனியன் என்பதற்கு ஒன்றியம் என்பது தான் பொருள் எனவும், எத்தனை டிக்ஸனரிகளை புரட்டிப் பார்த்தாலும் அதுதான் பதில் என்றும், அப்படி கூறியதில் தவறேதும் இல்லை என்றார்.

சுதந்திர தினத்தை இவ்வளவு நாள் கொண்டாடாமல் தற்போது பாஜக கொண்டாடுவதை வரவேற்பதாகவும் , மதத்திற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் உண்டு, ஆனால் தேசியக்கொடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறிய அவர், பைபிளில் வருவது போல பாஜகவினர் கெட்ட குமாரர்கள் எனவும், அவர்கள் தேசியக் கொடியை பிடித்திருப்பதை வரவேற்பதாகவும் கூறினார்.

இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான் எனவும், இந்து மதத்தை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் அது மகாத்மா காந்தியால் மட்டுமே முடியும் எனவும், காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அண்மை காலமாக கிறிஸ்தவம் மற்றும் பைபிள் போன்றவற்றை அடிக்கடி மேற்கோள் காட்டி பேசுவது குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது உள்நோக்கத்துடனான கேள்வி எனவும் நீங்கள் மாலைக்கண் உள்ளவர் மாலைக்கண் உள்ளவர்களுக்கு சில பார்வைகள் தெரியாது எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?