ஆளும் கட்சின்னு தலைக்கனமா…? ஆணவத்தில் ஆட்டம் போடாதீங்க… திமுகவை எச்சரித்த மார்க்சிஸ்ட் கட்சி!

Author: Babu Lakshmanan
17 March 2023, 9:27 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 22 மாதங்களில் மிகவும் கேள்விக்குறியாகி இருப்பது
சட்டம், ஒழுங்கு பிரச்சினைதான் என்பது தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வெளிப்படுவதை காண முடிகிறது.

குறிப்பாக கொலை, கொள்ளை, கூட்டு பாலியல் பலாத்கார குற்றங்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ஆள் கடத்தல், திமுக கவுன்சிலர்களின் நில அபகரிப்பு, அத்துமீறல், பொதுஇடங்களில் திமுக அமைச்சர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வது போன்றவை சர்வ சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன என்பது கண் கூடாகவே தெரிகிறது.

அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு சாட்சியாக மூன்று வேதனை மிகு சம்பவங்கள் அரங்கேறியதை இங்கே குறிப்பிடவேண்டும்.

கடந்த ஆண்டின் இறுதி நாளில் சென்னை தசரதபுரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி கலந்துகொண்ட திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் ஒருவரே பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவமும், பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் மூன்று நாட்களுக்கு பிறகு திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் திமுகவினரின் கைதுக்கு முன்பாக அந்தப் பெண் காவலர் கண்ணீர் விட்டு கதறி அழுதபோதும் கூட அவர் மீது இளைஞர்களின் கைகள் தெரியாமல்தான் பட்டுவிட்டது. அதற்காக அந்த இளைஞர்கள் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். அதனால் இப்பிரச்சினயில் சமரசம் ஏற்பட்டு விட்டது என்று இந்த பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா கூறி அந்த இரண்டு இளைஞர்களையும் அனுப்பி வைத்ததுதான்.

மிகுந்த கவலை அளிக்கும் இந்த அட்டூழியத்தின் சுவடுகளே தமிழக மக்களிடம் இன்னும் மறையாத நிலையில் அடுத்ததாக இன்னொரு அராஜக செயலையும் திமுகவினர் திருச்சி நகரில் மிக அண்மையில் அரங்கேற்றினர். இது அடுத்த நிமிடமே அத்தனை டிவி செய்தி சேனல்களிலும் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பாகி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் உண்டாக்கியது.

அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக திருச்சி சிவா எம்பியின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில் நேருவின் ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த அவருடைய காரையும் பைக்குகளையும் அடித்து நொறுக்கினர். அப்போது அந்த வீட்டில் பணிபுரிந்த 65 வயது பெண்மணி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்நிகழ்வின் உச்சகட்டமாக போலீஸ் விசாரணையின்போது அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்குள்ளேயே புகுந்து திமுக எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதும் அப்போது அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசியடித்ததில் பெண் காவலர் சாந்தி என்பவரின் கை எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடூரமும் நடந்தது.

இதற்கு இடையேதான் அதே திருச்சி நகரில் கடந்த 12-ம் தேதி நடந்த இன்னொரு சம்பவம் மிகுந்த தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பிரிவில் பேராசிரியையாக பணியாற்றும் சீதாலட்சுமி என்பவர் கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வழக்கம்போல் அங்குள்ள மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். பிறகு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்க வந்தபோது ஒரு கொள்ளையன் அவருடைய பின் தலையில் மரக்கட்டையால் தாக்கி அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததும் தரதரவென்று இழுத்துச் சென்று ஓரமாக போட்டுள்ளான்.

பிறகு சீதாலட்சுமி ஓட்டி வந்த ஸ்கூட்டரையும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து அவன் தப்பி விட்டான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மாநிலம் முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய பிறகுதான் செந்தில்குமார் என்ற கொள்ளையனை போலீசார்
கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு இது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததுடன் திமுக அரசு
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கவனமே செலுத்துவதில்லை என்ற
என்ற விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கும் போதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதுபற்றி வாயே திறப்பதில்லை. மாறாக குற்றச்சாட்டு கூறும் கட்சிகளைதான் வசை பாடுவது வழக்கம்.

ஆனால் இப்போது முதல்முறையாக திருச்சி நகரில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டித்து இருக்கிறது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை கோபம் கொப்பளிக்க கண்டித்து இருப்பதுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அட்வைஸ் செய்திருக்கிறார்.

அவர் தனது பதிவில், “திருச்சியில், திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள். இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ மேலும் கூடுதலாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும். பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல் சட்டத்தின் கீழும் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று கொந்தளித்து இருக்கிறார்.

“மார்க்சிஸ்ட் திடீரென இப்படி ஆவேசம் அடைந்திருப்பதற்கு முக்கிய காரணமே 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். தமிழகத்தில் இப்படியே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டு போனால் பொதுமக்களிடம் திமுக அரசு மீது அதிருப்தியும், வெறுப்பும் அதிகரித்து எதிர்வரும் தேர்தலில் அது திமுக கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பதை தமிழக காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை விட மார்க்சிஸ்ட் நன்றாகவே உணர்ந்துள்ளது. எனவேதான் அக்கட்சியின் மாநில செயலாளர் இப்படி கொதிக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“என்னதான் பிரதமர் மோடியின் மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்,2021 சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் செய்தது போல வெறுப்பு பிரச்சாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திரும்ப மேற்கொண்டாலும் கூட மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் அது வாக்காளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அதிமுக பாஜக கூட்டணி மீதுதான் திருப்பிவிடும்.

அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு மாதம் வாக்காளர்களை மிக சிறப்பாக உபசரித்ததுபோல் கவனித்துக் கொண்டாலே போதும் 39 தொகுதிகளையும் நாம் எளிதில் கைப்பற்றி விடலாம் என்று திமுக நினைத்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும்.

தவிர திமுக தலைவரும் முதலமைச்சரான ஸ்டாலின் பேச்சை திமுக அமைச்சர்கள்,
நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. ஏனென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தனது 70-வது பிறந்தநாளையொட்டி திமுகவினர் யாரும் சாலை ஓரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதோ, கொடிக்கம்பங்களை ஊன்றுவதோ கூடாது. இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவேண்டாம். மீறி நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு அதேபோல ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம்?…

கடந்த 13ம் தேதி கிருஷ்ணகிரியில் திமுக பேனர் வைக்கும்போது பாலாஜி என்ற கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது விஸ்வரூபம் எடுத்தால் சென்னை ஐகோர்ட்டில் நான்காண்டுகளுக்கு முன்பு சாலை ஓரங்களிலோ, நடுவிலோ பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்டுகள், தோரணங்கள், கொடிக்கம்பங்கள் வைக்கமாட்டோம் என்று திமுக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மீது கேள்வி வரும். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பம் ஊன்றியபோதும் இதுபோல் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

எனவேதான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திமுக தலைமை தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல தெரிகிறது.

அதேபோல் சட்டம், ஒழுங்கு பிரச்சனையிலும் திமுகவினர் தொடர்ந்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தலாம் என்று மார்க்சிஸ்ட் கருதுகிறது. அது எதிர்வரும் தேர்தலில் பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சுகிறது

ஆகவேதான் சென்னை-சேலம் 8 வழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம், என்எல்சியின் நிலம் கையெடுப்பு போன்றவற்றில் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுவிட்ட மார்க்சிஸ்ட் திருச்சி காவல் நிலையத்தில் திமுகவினர் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கண்டித்து இருக்கிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

Views: - 358

0

0