மறு விசாரணை வளையத்தில் திமுக அமைச்சர்கள்… ‘அப்செட்’டில் திமுக தலைமை… திண்டாட்டத்தில் OPS, வளர்மதி…?

Author: Babu Lakshmanan
9 February 2024, 9:08 pm
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி 8ம் தேதி காலை வெளியானது. ஆனால் அதை மகிழ்ச்சியோடு திமுகவினர் கொண்டாட முடியாமல் மிகவும் அப்செட்டுக்கு உள்ளான நிலை அன்று மாலையே ஏற்பட்டு விட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

ஏனென்றால் திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளையும், முன்பு வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்தபோது ஒரு விஐபிக்கு சட்டவிரோதமாக வீடு ஒதுக்கியதாக கூறப்படும் வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன் வந்து மறு விசாரணை செய்யப் போவதாக அறிவித்தார். இது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

இது இந்த தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக இவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை தரும். தேர்தலில் போட்டியிடுவதற்கும் சிக்கலை உருவாக்கும் என்பதும் வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

இதற்கு முக்கிய காரணமே இந்த ஆறு பேருமே தங்களது கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விடுதலை பெற்றுள்ளனர் என்ற கருத்தையும் நீதிபதி வெளிப்படுத்தி இருந்ததுதான். அதிலும் குறிப்பாக
ஓ பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதில் அதிகபட்ச அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தியும் தெரிவித்தார்.

“கீழமை நீதிமன்றங்கள் இவர்கள் ஆறு பேர் மீதான வழக்குகளையும் சரி வர விசாரிக்காமல் விடுதலை செய்தது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இதில் ஏராளமான சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளது. எனவே எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பொறுப்பை வகிக்கும் எனக்கு இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் அதிகாரம் உண்டு” என்றும் அப்போது அவர் அதிரடி காட்டினார்.

இது ஏற்கனவே அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கி இருந்த பொன்முடிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த வழக்கில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலக வேண்டும், வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க உத்தரவிடவேண்டும் என சிறப்பு நீதி மன்றத்தில் வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. நானே விசாரிப்பேன் என உறுதிபட அறிவித்தார்.

மறு ஆய்வு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர, “ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்று பாராட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை சந்திக்கும்படி பொன்முடியை அறிவுறுத்தினார்.

இந்த நிலையில்தான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் மாற்றப்படுவது வழக்கம் என்ற அடிப்படையில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனால் வழக்குகளில் சிக்கியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அதேநேரம் இனி இந்த வழக்குகள் எல்லாம் என்ன ஆகும்?…தொடர்ந்து விசாரிக்கப்படுமா?…அல்லது கிடப்பில் போடப்படுமா?…என்ற பல்வேறு சந்தேகங்களும் எழுந்தன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த மாதம் ஜனவரி இரண்டாம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் இட மாறுதலாகி வந்தார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்படுவதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வகித்து வந்த எம் பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதே சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பே அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதுதான்.

வந்த வேகத்திலேயே கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட வழக்குகளை அவர் மீண்டும் எடுத்துக் கொண்டதுடன் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஓபிஎஸ், வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளும், ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 12, 13 தேதிகளிலும், பொன்முடி வழக்கு
19 முதல் 22ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்ற பட்டியலையும் வெளியிட்டார்.

இதனால் உடனடியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு இருவரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதியை பெறமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எங்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று மனு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் கடந்த 5ம்தேதி காலை உத்தரவிட்டது. ​அன்று மதியம் சென்னை உயர் நீதி மன்றத்தில் மறு ஆய்வு வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்து உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி அவர் வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர்கள் மீதான மறு ஆய்வு வழக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி மாலை மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்து இருக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான 4 வழக்குகளும் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கனவே அறிவித்தபடி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 12, 13ம் தேதியும், பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி கூறியிருப்பதால் ஆறு பேர் மீதான வழக்குகளும் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டால் தமிழக அரசியலில் அது பெரும் சூறாவளியை ஏற்படுத்தும். இதில் பெரும்பாலும் இன்னாள், முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் கீழமை நீதிமன்றங்களில் சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படவில்லை என்பதை காரணம் காட்டித்தான் ஆறு பேர் மீதான வழக்குகளையும் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு கையில் எடுத்துள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் தீர்ப்பு கூறப்பட்டு அதில் அனைவருக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களின் எதிர்கால அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலருடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

பொன்முடியை பொறுத்தவரை அவருடைய மகன் கௌதம சிகாமணியும் இந்த வழக்கில் இருக்கிறார். அதேபோல ஓ பன்னீர்செல்வத்தின் இருமகன்களான ரவீந்திரநாத்தும், ஜெயதீப்பும் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதனால் இந்த வாரிசுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். அதேபோல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியிடுவதில் சிக்கல் உருவாகும். ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனக்கென்று தனது சமுதாய மக்களிடம் மிகப் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்று கருதுகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தித்தான், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் என்பது உறுதியானால் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோம், என்ற அவருடைய நம்பிக்கை அடியோடு தகர்ந்து போய்விடும்.

ஏன் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இருக்கிறாரே, அவரால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படாதா?…என்ற கேள்வி எழலாம். ஆனால் சென்னையில் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே மக்களிடம் அவர் அறிமுகமானவர். அதனால் அதிமுகவுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. தவிர ஓ பன்னீர்செல்வமோ
துணை முதலமைச்சர் ஆகவும் பதவி வகித்தவர்.

அதேநேரம் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி நால்வரும் திமுகவில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டவர்கள். ஆளும் கட்சியிலும் இருப்பவர்கள். அதனால் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஆங்கில டி. வி.செய்தி சேனல்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளும் கூட தலை கீழாகளாக மாறலாம்.

ஆரம்பத்தில் இருந்தே திமுக அமைச்சர்கள் தரப்பினர் கோரிக்கை என்பது மறு ஆய்வு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது என்பதுதான். இதற்காகவே அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையிடவும் செய்தனர். இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடமே மீண்டும் அந்த வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர்களுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இதனால் அமைச்சர்கள் தரப்பினர் மட்டுமின்றி, திமுக தலைமையும் கடும் அப்செட்டுக்கு உள்ளாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 231

0

0