விஸ்வரூபம் எடுத்த அரியலூர் விவசாயி மரணம் : கொந்தளித்த திமுக கூட்டணி கட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 10:01 pm
Farmer - Updatenews360
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட
நிலையில் தமிழக காவல்துறையால் லாக்கப் மற்றும் தாக்குதல் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

தொடரும் லாக்கப் மரணங்கள்

சீர்காழி சத்தியவான், ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன், சேலம் மாற்றுத்திறனாளி பிரபாகரன், சென்னை இளைஞர் விக்னேஷ், திருவண்ணாமலை பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தங்கமணி, சென்னை கொடுங்கையூர் ராஜசேகரன், கன்னியாகுமரி இளைஞர் அஜித், நாகப்பட்டினம் சிவசுப்பிரமணியன் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த மரணங்களுக்கு உடல் நலக்குறைவு, போதைக்கு அதீத அடிமை, வலிப்பு நோயால் பாதிப்பு என்று காவல் துறை தரப்பில் பல காரணங்கள் கூறப்பட்டாலும் போலீஸ் விசாரணையில் இருந்தபோதுதான் அவர்கள் உயிரழந்தனர் என்று கூறப்படுவதை மறுக்க முடியாது.

விஸ்வரூபம் எடுத்த விவசாயி மரணம்

இந்த நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவருடைய மரணமும் நிகழ்ந்துள்ளதாக ஒரு பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 25ம் தேதி அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் என்பவர் மீது கொடுக்கப்பட்ட ஒரு புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் ஒருவர் தலைமையில் 8 காவலர்கள் செம்புலிங்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் வீட்டில் அருண்குமார் இல்லாத நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, இன்னொரு மகன் மணிகண்டன் ஆகியோரைத் கொடூரமாக தாக்கியதாகவும், இதனால் படுகாயமடைந்த மூவரும், அரியலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு விவசாயி செம்புலிங்கம் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் சமூக நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அது மட்டுமின்றி, அரசியல் கட்சிகளும் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகி உடனடியாக தங்களது கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கின்றன. இதனால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும், தமிழக பாஜகவின் தொண்டருமான அண்ணன் செம்புலிங்கம் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த அண்ணன் செம்புலிங்கத்தின் மகன் மணிகண்டனை திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு, அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம்.

உயிரிழந்த செம்புலிங்கத்துக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மணிகண்டனிடம் காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன். இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கைது செய்ய தயக்கம் ஏன்?

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, “காவல் துறையினர் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் செம்புலிங்கம் தெளிவாக விளக்கியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களிலும் காவல்துறையினர் தாக்கியது தான் அவரது காயங்களுக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் உழவர் செம்புலிங்கத்தை தாக்கிய காவலர்களை கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை” என்று கொந்தளித்து இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, “காவல் துறையினரால் பொதுமக்கள் அடித்துக்கொல்லப்படும் கொடுமைகளைத் தடுக்கத் தவறும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

காவல்துறை மீது சந்தேகம்

காவலர்கள் தாக்கியதில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள்தான் செம்புலிங்கம் உயிரிழக்க முதன்மை காரணம் என்று அவரது குடும்பத்தினர் அளித்த புகாரினை ஏற்க மறுத்து, காவல் துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் விவசாயி செம்புலிங்கம் காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் காவலர்கள் தனக்கு இழைத்த கொடுமைகள் பற்றியும் தாக்குதல் குறித்தும் விளக்கி கூறி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி அரியலூர் அரசு மருத்துவமனை ஆவணங்களிலும் காவல் துறையினரின் தாக்குதலே செம்புலிங்கம் மீதான பலத்த காயங்களுக்கான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் செம்புலிங்கத்தைத் தாக்கிய காவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?

சாதாரண புகாருக்காக 8 பேர் கொண்ட காவல்படை, வழக்கிற்குத் தொடர்பில்லாத விவசாயி செம்புலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதும் செம்புலிங்கம் உயிரிழப்பு தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்க மறுப்பதும் காவல் துறையின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் காவல் துறை விசாரணையின்போதே உயிரிழந்துள்ளனர். அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான காவல் துறையின் இத்தகைய அதிகார அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அதிகார வல்லாதிக்க கோரமுகமே தொடர்ச்சியாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.

இத்தகைய மரணங்கள் தடுக்கப்படவேண்டும் என்று தமிழக காவல் துறை ஆணையரே சுற்றறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தும் அளவிற்கு நிலைமை மோசமான பிறகும், காவல் துறை விசாரணை மரணங்கள் தொடர்வது கொடுங்கோன்மையின் உச்சமாகும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

கொந்தளித்த வேல்முருகன்

திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமை கட்சியும் இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் விடுத்த அறிக்கையில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், தன் மீதும், குடும்பத்தினர் மீதும், நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செம்புலிங்கம் தெளிவாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகமும், அதிகார அத்துமீறலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர் காலத்தில் காவல்துறையிடம் இருந்து பொதுமக்களை காக்க முடியும்.
எனவே செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

டிஜிபியே அறிவுறுத்தியும் மோசமான நிலை

சமூக நல ஆர்வலர்கள் மிகுந்த வேதனையுடன் கூறும்போது, “காவல் நிலையங்களிலோ, அல்லது விசாரணைக்காக ஒருவரை தேடிச் செல்லும்போதோ காவலர்கள் அவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. அதேபோல் லாக்கப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஜிபியே சுற்றறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தும் அளவிற்கு நிலைமை மோசமான பிறகும், இதுபோன்ற துயர மரணங்கள் நிகழ்வதுதான் கொடுமையாக உள்ளது.

அதுவும் ஒரு சாதாரண புகாரின் பேரில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர், அவர்கள் தேடிச் சென்ற நபர் இல்லை என்பதால் செம்புலிங்கம் உட்பட அவரது குடும்பத்தினர் மூன்று பேரை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் தகவல் மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லா அரசியல் கட்சி தலைவர்களுமே உயிரிழந்த செம்புலிங்கத்தின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்று கோரிக்கையை காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைத்திருக்கிறார்கள்.’

அரசுக்கு கெட்ட பெயர்

காவல்துறையில் பணியாற்றும் அனைவருமே கடுமையாக நடந்து கொள்பவர்கள் என்று கூறிவிட முடியாது. அதேநேரம் அவர்களில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ தங்களது மூர்க்க குணத்தை காட்ட போய் விசாரணை கைதிகள் சிலரின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறார்கள். இங்கே தான் மனித உரிமைகள் பற்றிய கேள்வியும் எழுகிறது.

விசாரணை நடத்துபவர்களிடம் கண்ணியம் காட்டுவது சரியல்ல என்பது ஏற்கக் கூடிய ஒன்று என்றாலும் கூட காவல்துறையினர் தங்கள் கருணை மனதையும் காட்டினால் இது போன்ற மரணங்கள் நடப்பது குறைந்துவிடும். அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படாது” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 346

0

0