திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலைதூக்கும் ரவுடிசம்… அரசியல் சுய லாபத்திற்காக நீட் எதிர்ப்பு ; பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 4:18 pm

திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரவுடியிசம் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில், தேமுதிக நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த், முன்னதாக தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. பாதுகாப்பு குளறுபடி எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இதுவே சான்று. ஆளுநருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கே என்ன நிலைமை என பாருங்கள். திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரவுடியிசம் தான்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் யாருடன் கூட்டணி என முடிவெடுப்போம். திமுக அரசு 90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கான ஆக்கபூர்வமான எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

இந்தியா முழுவதும் 50 லட்சம் இல்லை, 50 கோடி கையெழுத்து வாங்கினாலும், நீட்டை ஒழிக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக திமுக மாணவர்களை குழப்பி கொண்டிருக்கின்றனர். நீட் மட்டும் இல்லை, எந்த தேர்வானாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள். நீட்டை எதிர்ப்பேன் என மாணவர்களை அரசியல் சுய லாபத்திற்காக குழப்பி வருகின்றனரே தவிர, ஒன்றுமே இல்லை.

காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றினால் இந்த மாவட்டம் செழிக்கும். எதற்கும் பலனில்லாத சனாதனத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதேபோல, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மதத்தை பற்றி பேசுவது என்பது மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவின் வாக்கு வங்கி உயரும். மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும், என பேசினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?