மற்ற கட்சியினா 3 பேரு… திமுகனா மட்டும் 50 பேரா… கேள்வி கேட்ட நாம் தமிழர் வேட்பாளரை அடித்து உதைத்த திமுகவினர்..!!

Author: Babu Lakshmanan
4 February 2022, 6:43 pm
Quick Share

வேலூரில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் அளித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சங்கர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சி 56வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் துளசி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய 4வது மண்டல அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் முன்மொழிய ஒருவர் என அதிகபட்சம் 3 பேர் வரை மட்டுமே அனுமதி என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால்,3 பேர் மட்டுமே உள்ளே சென்ற நிலையில், வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் துணைத்தலைவர் உள்ளிட்ட சிலர் வெளியிலேயே இருந்தனர்.

அந்த சமயம், வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமையில் 3 வேட்பாளர் உடன் 50க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை மண்டல அலுவலகத்தில் எதுவும் சொல்லாமலும், தடுத்து நிறுத்தாமலும் அனைவரையும் உள்ளே அனுமதித்தாக தெரிகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் அதிர்ந்து போயினர்.

மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதித்து விட்டு, திமுகவினரை கும்பலாக அனுமதிப்பதா..? என்று தேர்தல் அதிகாரிகளிடம் நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைத் தலைவர் சங்கர் கேள்வி கேட்டார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், எம்.எல்.ஏவையே எதிர்த்து கேள்வி கேட்டு பிரச்சனை செய்கிறீயா..? என்று கேட்டு நாம் தமிழர் கட்சி சங்கரை அடித்து உதைத்துள்ளனர். இதில், சங்கரின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் வேலூர் சிம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில், தாக்குதலில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டமாக வந்த அவர்களை மட்டும் ஏன் அனுமதித்தீர்கள் என்று எம்.எல்.ஏ தரப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சி சேர்ந்த நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை திமுகவினர் தாக்கிய சம்பவம் அரங்கேறியது நினைவுகூரத்தக்கது.

சீமானுக்கும் திமுகவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், அண்மையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.,வினரை செருப்பால் அடிப்பேன் என சீமான் மேடையில் செருப்பை தூக்கிக் காட்டினார். இதைத் தொடர்ந்து, அக்கட்சியினரை திமுகவினர் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 881

0

0