கமிஷன் வேணாம்… அதுக்கு பதிலா என் வீட்டுக்கு இலவசமா குழாய் இணைப்பு கொடு.. விவசாயியிடம் திமுக கவுன்சிலரின் சகோதரர் அடாவடி!!

Author: Babu Lakshmanan
16 April 2022, 12:25 pm

கோவை : உடைந்த குழாயினை சரி செய்ய விடாமல் நான் தான் எல்லாம் என திமுக கவுன்சிலரின் சகோதரர் விவசாயி ஒருவரிடம் ரகளை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜவருல்லா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். பவானி ஆற்றில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் எடுத்து குழாய் பதித்து தனது தோட்டத்திற்கு பாசன வசதி ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இவரது தண்ணீர் குழாயில் வச்சினம்பாளையம் பகுதியில் சாலையின் ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அங்கு சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் தேண்மொழியின் சகோதரர் ராமமூர்த்தி, அந்த விவசாயியை தடுத்து உடைந்த குழாயினை சரி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

குழாய் உடைப்பு சரிசெய்ய பேரூராட்சி சாலையை தோண்டக்கூடாது, அப்படி தோண்ட வேண்டும் என்றால் தனது வீட்டிற்கு இலவசமாக பாசன குழாயில் இருந்து தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும், என கூறியுள்ளார்

அதற்கு அந்த விவசாயி மறுப்பு தெரிவித்த நிலையில், உடைப்பு ஏற்பட்ட குழாயினை சரி செய்ய விடாமல் நான் தான் இந்த ஏரியா கவுண்சிலர், எனக்கு வேண்டியதை செய்ய முடியாது என்றால், இந்த ஊரிலேயே உன்னால் நடமாட முடியாது என தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

மேலும் உடைப்பு ஏற்பட்ட குழிக்குள் அமர்ந்து கொண்டு குழியை மூட விடாமல் மண்வெட்டியை பிடிங்கி எரிந்து ரகளை செய்த அந்த நபரால், அதிர்ச்சி அடைந்த விவசாயி ஜவருல்லா, செய்வது தெரியாமல் அங்கு இருந்து திரும்பியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ஜவருல்லா, ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் நிலையில், சிறுமுகை பேரூராட்சியில் திமுக பிரமுகரின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்து முதல்வர் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!