‘காமராஜருக்கு கல்லறை கட்டுனதே திமுக தான்’… ஆர்எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.. காங்கிரஸுக்கு எழுந்த கோபம்.. திமுகவுக்கு நேரடியாக கொடுத்த பதிலடி..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
28 September 2022, 1:32 pm

காமராஜர் பற்றி திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்தள்ளது.

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஏதேனும் கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, பட்டியலினத்தவர்கள் நீதிபதி பதவிக்கு வந்தது, திமுக போட்ட பிச்சை என்று திமுக முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம், நீதிமன்றம் வரையில் சென்று, ஆர்.எஸ். பாரதி முன்ஜாமீன் வாங்கி பிணையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். இன்று வரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக நிர்வாகி காமராஜர் பற்றி இப்படிப் பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரை சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து எல்லோருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் எனக் கூறினார்.

மேலும், பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி இது போன்ற (திமுகவின்) அநாகரிகமான பொய்யான பேச்சு. திரு. ஆஎஸ் பாரதி அவர்களின் பேச்சை வன்மையான கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் வெட்டுவேன் என்று அரசியல் பேசியவர் இல்லை . அவர் புகழ் என்றும் வாழும் ..,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக நிர்வாகியின் இந்த சர்ச்சை பேச்சால் கூட்டணி கட்சிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!