ஊழலுக்காக மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்படும்… தமிழ்நாட்டுக்கே அன்று தீபாவளி : ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan21 June 2023, 1:44 pm
தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக போராட்டத்தை அறிவித்தது.
அதன்படி, இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது, தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, பொன்னையன் உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊழலுக்காக மீண்டும் கலைக்கப்படும் ஆட்சியாக திமுக இருக்கும். அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. ஊழலில் பிறந்து, ஊழலில் வளர்ந்து, ஊழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது திமுக.
தமிழக ஆளுநர் சில நாட்களில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் உள்ளது. அப்போது ஒரு நல்ல செய்தி வரும், திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும், தமிழ்நாட்டுக்கே அன்றைக்குத்தான் தீபாவளி.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கொலை, கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஊழலுக்காக கலைப்பட உள்ள ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்.
அதிமுக ஆட்சியில் அம்மா கொண்டுவந்த திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையை தான் திமுக செய்து வருகிறது. புதிய திட்டங்கள் ஒன்றுமில்லை. 30 ஆயிரம் ரூபாய் கோடி ஊழலை மத்திய அரசு தோண்ட ஆரம்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்கு செல்வார்கள் என்று தான் முதலமைச்சர் ஸ்டாலின் பயந்துகொண்டு இருக்கிறார். இந்த மாதம் திமுகவுக்கு சிறைக்கு போற வாரமாக தான் உள்ளது.
அடுத்து அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சிறைக்கு போக போகிறார்கள். இதில், செந்தில் பாலாஜியும் வாயை திறந்தால் பலர் செல்வார்கள் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
0
0