நமக்கு எதிரி திமுக தான்.. அதனால் அதிமுகவினர் பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 2:33 pm

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகின்ற இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விடும் என்ற பயத்தில் பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு திமுக வருகின்றது.

குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பொதுமக்களை அங்குள்ள திமுகவினர் அடைத்து வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற விடாமல் தடுத்தனர் .

இது போன்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் 100 நாள் வேலை திட்டத்தில் உங்களை சேர்க்க மாட்டோம் என்று மிரட்டி வருவதோடு ,அங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் பணியாற்றினால் வருகின்ற காலங்களில் உங்களது பஞ்சாயத்திற்கு பணம் ஒதுக்க மாட்டோம் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்ற அச்சத்தில் திமுகவினர் கட்டவிழ்த்து விடப்பட்டு அங்குள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசும் பொழுது, பொதுமக்கள் திமுகவினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள், முழு மதுவிலக்கு அளிக்காதது மற்றும் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தாதது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்காக பொதுமக்கள் திமுகவின் மீது கடும் கோபத்தில் உள்ளதால் இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டியில் போட்டியிடுகின்ற பாமக வேட்பாளர் அன்புமணி நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் பொழுது, மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை தீய சக்திகள் என்றே குறிப்பிடுவார்கள். எனவே அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணாக்காமல் நமது பொது எதிரியான திமுக வேட்பாளருக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதே போன்று அவர் பேசும்போது , சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தவறினால் பதவி விலக வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியான நிலையில் சமீபத்தில் அதன் அருகில் உள்ள குமார மங்கலத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் என்பவர் பலியான நிலையில், இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, கள்ளச்சாராயத்தை தடுப்பதில் போலீசாரும், தமிழக அரசும் படுதோல்வி அடைந்துள்ளது . எனவே தமிழக அரசு பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதே போன்று இட ஒதுக்கீடு திமுக போட்ட பிச்சை என்றும் அதனால் நாய்கள் கூட பிஏ பட்டம் பெற்றுள்ளது என்று கூறியுள்ள அமைச்சரை வன்மையாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டிக்கின்றோம் என்று கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!