மஸ்தான் அமைச்சர் பதவி தப்புமா….? திமுகவை திணறடிக்கும் திண்டிவனம்…? கடும் அப்செட்டில் CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
1 November 2023, 8:00 pm

முதலமைச்சர் ஸ்டாலினை திணறடிக்கும் விதமாக அடுத்தடுத்து திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் அத்துமீறல்கள், தாக்குதல்கள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் திமுக அரசுக்கு இது தீராத தலைவலியாக உருவெடுத்தும் இருக்கிறது.

ஏற்கனவே குடைச்சலை கொடுத்த அதே அமைச்சரால் மீண்டும் மீண்டும் சிக்கல் என்கிறபோது முதலமைச்சர் எரிச்சல் அடையாமல் வேறு என்ன செய்வார்? என்று திமுகவினரே கொந்தளித்து புலம்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை செஞ்சி மஸ்தான்.

திண்டிவனம் நகராட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான் மீது கடந்த மே மாதம் இரண்டாவது வாரம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து பலியான 14 பேர் விவகாரத்தில் அவருடைய பெயரும் பரவலாக அடிபட்டது.

திண்டிவனத்தைச் சேர்ந்த மருவூர் ராஜா என்ற கள்ளச் சாராய வியாபாரியுடன் அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்போது பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மஸ்தானின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து செஞ்சி பேரூராட்சி திமுக செயலாளராக இருந்த காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டது. இவர் அமைச்சர் மஸ்தானின் தம்பி ஆவார்.

மேலும் பல்வேறு புகார்களின் எதிரொலியாக, மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவிகளையும் திமுக தலைமை பறித்தது. என்றபோதிலும் அவ்வப்போது செஞ்சி மஸ்தான் பற்றி திமுகவினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தாலும் அதை அறிவாலயம் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகராட்சி கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்து அதிர்ச்சியும் அளித்தனர்.

இந்த நிலையில்தான் திண்டிவனம் நகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் மஸ்தானுக்கு எதிராக மீண்டும் கொதித்தெழுந்து போராட்டத்தில் இறங்கிய நிகழ்வையும் காண முடிந்தது.

திமுகவையும், குடும்ப அரசியலையும் பிரிக்க முடியாது என்று கூறுவதை உண்மையென நிரூபிப்பது போல் 8-வது வார்டில் திண்டிவனம் நகர திமுக அவைத் தலைவர் ரவிச்சந்திரனும், அவருடைய மனைவி நிர்மலா 9-வது வார்டின் கவுன்சிலர்களாக உள்ளனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆதரவோடு நகராட்சி தலைவராக நிர்மலா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதலே கணவனும், மனைவியும் ஒன்றாக இணைந்து நகராட்சி நிர்வாகத்தின் அத்தனை விஷயங்களிலும் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் உச்சகட்டமாக அக்டோபர் 31ம் தேதி நகராட்சி கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 33வது வார்டு திமுக கவுன்சிலர் சீனி சின்னசாமி தலைமையில் 14 திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மருமகன் ரிஸ்வானை கண்டித்து திடீரென தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

சீனி சின்னசாமி பேசும்போது “திண்டிவனம் நகர் பகுதியில் 9 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு முறையான கணக்கு எதுவும் இதுவரை காட்டப்படவில்லை. நகராட்சியின் எல்லா வேலைகளிலும் அமைச்சர் மஸ்தானின் தலையீடு அளவுக்கு அதிகமாக உள்ளது. அதேபோல அவருடைய மருமகன் ரிஸ்வானும் அத்துமீறி செயல்படுகிறார். நகராட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் குறுக்கிடுகிறார். அதைக் கண்டித்தே இந்தத் தர்ணா போராட்டம்.

நகராட்சியில் மக்களுக்கான வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை. மாறாக கமிஷன் வசூல் செய்வது மட்டுமே தீவிரமாக நடக்கிறது. அமைச்சரின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு வேலைக்கும் அமைச்சரின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த வேலையே நடக்கும் என்றால் நாங்கள் எதற்காக? எங்களது கோரிக்கைகளை நகராட்சி தலைவி நிர்மலா காது கொடுத்து கேட்பதில்லை. அமைச்சர் சொல்வதைக் கேட்டு நடக்காமல் அவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 15 திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது அதிமுக கவுன்சிலர்கள் உட்பட பிற கட்சிகளின் கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரை கண்டித்து வெளிநடப்பும் செய்திருந்தனர்.
இதனால் திமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேரை மட்டுமே வைத்து நகராட்சி கூட்டத்தை நிர்மலா நடத்தியது கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.

இதுகுறித்து பெயரை வெளியிட விரும்பாத கவுன்சிலர்கள் சிலர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எந்தவொரு அமைச்சரும் முதலமைச்சர் ஸ்டாலினை மதிப்பதே கிடையாது. நகராட்சி தொடர்பான வேலைகளில் தலையிடுகிறார்கள்.
தங்களுக்கு உள்ள அதிகார பலத்தை காட்டி எங்களைப் போன்றவர்களை
மிரட்டுகிறார்கள். இந்த நகராட்சியில் மட்டுமல்ல மாநிலத்தின் பெரும்பாலான நகராட்சிகளிலும் இதே கதைதான் நடக்கிறது” என்று குமுறினர்.

திண்டிவனம் கவுன்சிலர்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதைப் போல அதே அக்டோபர் 31ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் இன்னொரு கூத்தும் அரங்கேறியது.

இந்த நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் கூட எவ்வித அடிப்படை வசதிகளும் முறையாக செய்யவில்லை, மேலும் திமுக நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரியின் கணவர் பினாமி பெயரில் நகராட்சி டெண்டர்களை எடுத்து பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கவுன்சிலர்கள் கடந்த சில மாதங்களாகவே குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில்தான் அக்டோபர் 31ம்தேதி நடந்த நகராட்சி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அதிமுக நகராட்சி துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் 13 கவுன்சிலர்கள், திமுகவை சேர்ந்த10 கவுன்சிலர்கள் என மொத்தம் 23 பேர் தனித்தனியாக நகராட்சி ஆணையாளரிடம் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் நகராட்சி தலைவர் தேர்தலை நடத்தவேண்டும் என்று மனு அளித்தனர்.

ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்களே, எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களுடன் மறைமுகமாக கை கோர்த்து கொண்டு நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பது திமுக தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

“இந்த இரண்டு நகராட்சிகளிலும், திமுக கவுன்சிலர்களே நகராட்சி தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து இருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவின் கைவசம் உள்ள பெரும்பாலான நகராட்சிகளில் இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி எழுவது திமுக தலைமைக்கு பெரும் சோதனையாகவே அமையும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“அதுவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திண்டிவனம் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் வைக்கும் குற்றச்சாட்டு மிகக்கடுமையானது. தவிர ஒன்பது கோடி ரூபாய்க்கு முறையான கணக்கே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுடன் செஞ்சி மஸ்தானுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஏராளமான ஆதாரங்களுடன் சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்திற்கு முன்பாக கடந்த மே மாதம் முதல் வாரம் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டது. இல்லையென்றால் அப்போதே மஸ்தானின் பதவி
பறிபோய் இருக்கும்.

அதேநேரம் இப்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தானின் பதவியை பறித்தால் சிறுபான்மையினரிடம் பெரும் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதுகிறாரோ, என்னவோ தெரியவில்லை. அதனால்தான் அவர் மீது துணிந்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்பது மட்டும் புரிகிறது.

என்றபோதிலும் இனியும் அமைச்சர் மஸ்தான் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால் அவருடைய பதவி பறிக்கப்படுவது நிச்சயம் என்கிறார்கள். ஏனென்றால் திண்டிவனம், சங்கரன்கோவில் நகராட்சிகளில் ஏற்பட்டது போன்ற நிலை உருவானால் அது
எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கலாம்.

ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டர் எடுப்பது தொடர்பாக வெடித்த மோதலில் பாஜகவை சேர்ந்த கவுல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், அவருடைய வக்கீல் மற்றும் ஆதரவாளர்களை 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கி காயப்படுத்தியதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே சூறையாடவும் செய்தனர்.

அப்போது திமுகவினரை தடுக்க வந்த தாசில்தார்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கும் அடி, உதை விழுந்தது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் சட்டம்- ஒழுங்கு பராமரிப்புக்கு அதிமுகவும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மறுநாளே திண்டிவனம், சங்கரன்கோவில் நகராட்சிகளில் எழுந்துள்ள சிக்கல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலி தரும் ஒன்றுதான்”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி தப்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?