திமுக அமைச்சரின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது… அண்ணாமலை கருத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 2:37 pm

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்று வந்தது.

தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போராட்ட களத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர், நேரில் சந்தித்து ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் போராட்டக்காரர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி நியமனத்திற்காகப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியப் பெருமக்களை நேற்று நேரில் சந்தித்திருந்தேன்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் துயரங்கள் மிகவும் வருத்தத்துக்குரியது.

ஆசிரியப் பணியை நோக்கமாகக் கொண்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், பல ஆண்டுகள் காத்திருந்தும், அதற்கான பலன் கிடைக்காமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட நிலையில்,

போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. அமைச்சர் பொன்முடி அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு வாரத்திற்குள்ளாக அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று, அமைச்சரைக் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!