சரித்திரத்தையே மாற்ற முயற்சி… இந்தியா என்றும் இந்தியா தான் ; மத்திய அரசு குறித்து திமுக எம்பி கனிமொழி விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 2:07 pm

இந்தியா என்றும் இந்தியா தான் என நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

வானவில் அறக்கட்டளை, சமூகச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ROSA), நாடோடி இனத்தவர் & பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் (TENT) ஆகியோரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் -ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய நான்கு நாடோடிப் பழங்குடியினரிடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டு பேசினார். அப்போது, நாடோடிப் பழங்குடிகளுக்கான ஆய்வு என்பது மிக முக்கியமான ஆய்வு. தமிழ்நாட்டில் உள்ள இந்த இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் மாவட்டத்துக்கு மாவட்டம், தாலுகாவுக்கு தாலுகா மாறுதல் இருக்கிறது. இதனால் கல்வி பயில்வதில் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் தரப்பட்டு குறைகள் களையப்படும், என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசியதாவது :- இந்தியப் பிரதமர் என அழைக்கப்பட்டதை பாரதப் பிரதமர் என அழைப்பிதழ் அடித்திருக்கிறார்கள். சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. அதன் பின்னால் இருக்க கூடிய அரசியலை எதிர்க்க கூடிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சியினர் ஆரம்பித்துள்ள நிலையில் பெயர் அவர்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது.

சரித்திரத்தையே மாற்றுகிறார்கள். புதிய திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறார்கள். இவர்களது செயல் எத்தனை இந்தியர்களின் மனதை புண்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும், என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!