மறக்க முடியாத மின்வெட்டும்… தடுக்க முடியாத நீட்தேர்வும்… திமுக ஓராண்டு கால ஆட்சி எப்படி…? மக்களுக்கு சோதனையா…? வேதனையா..?

Author: Babu Lakshmanan
7 May 2022, 5:09 pm
Quick Share

ஓராண்டு ஆட்சி

தமிழகத்தில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. திமுகவினர் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அச்சு, காட்சி ஊடகங்களிலும் ‘இது உலகமே வியந்து போற்றும் ஆட்சி, ஓராண்டில் 100 ஆண்டு சாதனை, இதுதான் திராவிட மாடல் ஆட்சி’ என்றெல்லாம் விளம்பரமும் செய்யப்படுகிறது.

காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக் உள்ளிட்ட 12 கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியை வானளாவ புகழ்ந்து பேசுகின்றன. அக்கட்சியின் தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

CM Stalin - Updatenews360

முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 202ஐ நிறைவேற்றி விட்டதாக அவர் பெருமிதத்துடன் கூறவும் செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்காக திமுக 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது.
அதில் 20க்கும் மேற்பட்டவை மக்களுக்கு நேரடி பணப்பயன் தருபவை.

தேர்தல் வாக்குறுதி

அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று சொன்னால் திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை
வழங்கப்படும், சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் விலை குறைப்பு, மாதாந்திர முறையில் மின் கட்டணம் கணக்கீடு, உள்ளூர் சாதாரண அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா கால வாழ்வாதார உதவித் தொகை 4000 ரூபாய், விவசாயிகளின் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய், ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவர்களின் வங்கி கல்வி கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து, விவசாயிகள் கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
நடைமுறை படுத்தப்படும் ஆகியவற்றை கூறலாம்.

இவற்றில் உள்ளூர் சாதாரண அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கொரோனா கால நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகியவை மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பது வெளிப்படையாக மக்களுக்கு தெரிகிறது.

அதிமுக விமர்சனம்

அதேநேரம் கடந்த ஓராண்டில் தமிழக மக்கள் பல்வேறு சோதனைகளையும் சந்திக்க நேரிட்டது. குறிப்பாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவமழை காரணமாக சென்னை அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மூன்று அடி உயரத்துக்கு மழைநீர் புகுந்து
பத்து பதினைந்து நாட்கள், மக்களை கடும் இன்னலுக்கும் உள்ளாக்கியது.

Image

இந்த நிலையில்தான், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில் இருள் சூழ்ந்த நகரம் ஒன்றில் மெழுகுவர்த்தி எரியும் பின்னணியில், “விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை இருளில் தவிக்கும் தமிழகம்! மின்மிகை To மின்வெட்டு” என்ற நறுக் வாசகங்கள் பளிச்சென்று தென்படுகிறது.

சட்டம் – ஒழுங்கு

கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சி குறித்து சமூக ஆர்வலர்களிடமும் அதிருப்தியே காணப்படுகிறது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மக்களிடையே வெகுவாக ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

“தமிழகத்தில் சிறுமிகளும் இளம் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் தினம் தினம் வெளிவருகின்றன. இதற்காக பள்ளி மாணவிகள் ஐந்தாறு பேர் தற்கொலை செய்து கொண்டதும் வேதனை. கொடைக்கானல் அருகே பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு அப்படியே அமுங்கிபோய் விட்டது.

சென்னை, விருதுநகர், வேலூர் போன்ற நகரங்களில் இளம் பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இதில் திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் சிலரும் சிக்கினர்.

அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பொது இடங்களில் அடித்துக் கொள்வதும், பள்ளிகளுக்குள் நடத்தும் அத்துமீறல்களும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு திமுக கவுன்சிலர்களில் பலர் தங்கள் பகுதிகளில் நில பிரச்சனை தொடர்பாக பொதுமக்களையும் கடைக்காரர்களையும் மிரட்டி தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுபோல் நடந்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறி உள்ளன.

பிரியாணிக்காக உணவக ஊழியர்களும், அதிபர்களும் மிரட்டப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன.

சிறை மரணம்

2 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவருடைய மகன் பெனிக்ஸ் இருவரும் போலீஸ் லாக்கப்பில் இறந்ததுபோல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணைக் கைதிகள் 6 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
அன்று சாத்தான்குளம் சம்பவத்திற்காக போராடிய திமுக கூட்டணி கட்சியினரும், திரையுலக போராளிகளும் இன்று வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர்.

Custodial Death - Updatenews360

மிக சமீபத்தில் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி திமுக அரசு மக்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது.

உலக அளவில் தலைசிறந்த பொருளாதார வல்லுனர்கள் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தும் கூட தமிழக அரசு கடந்த ஓராண்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. இது 2022-23 நிதி ஆண்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாயாக உயரும் என்கிறார்கள். இப்படி கடன் வாங்குவதற்காகவா, பொருளாதார வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டது? என்ற கேள்வியும் எழுகிறது.

மின்வெட்டு

ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பல மணி நேரத்திற்கு ஏற்பட்ட மின்வெட்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் மின்தடைக்கு உத்தரவாதம் உண்டு என்பது போல் ஆகிவிட்டது. இந்த கத்திரி வெயில் சீசனிலும் மாநிலத்தில் மின் வெட்டு குறைந்ததுபோல் தெரியவில்லை.

மாறாக மின்வெட்டுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டி தமிழகத்திற்கு தினமும் 50 ஆயிரம் டன் நிலக்கரிதான் வருகிறது, ஆனால் எங்கள் தேவையோ 72 ஆயிரம் டன்னாக உள்ளது என்று மின்துறை அமைச்சர் கூறுகிறார்.

power cut 4 - updatenews360

ஆனால் தமிழக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தித்திறன் 60% வரை மட்டுமே உள்ளது. அதை 85 சதவீதமாக உயர்த்தினால் 50 ஆயிரம் டன் நிலக்கரியே போதுமானதாக இருக்கும் என்கிறார்கள்.

அதனால் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இப்போதைக்கு ஓயாதுபோல் தெரிகிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியோ அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிடும் என்கிறார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மின்மிகை மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது.

குற்றம்

சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷ் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பட்டியல் இனத்தைச் சேர்ந்த தனது துறை அதிகாரி ஒருவரை சாதி பெயரைச்சொல்லி திட்டிய விவகாரத்தில் அவர் இலாகா மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

rajakannappan - updatenews360

திமுக அரசு கடந்த ஓராண்டில் 220 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக கூறுகிறது. ஆனால் அவை என்னென்ன என்பது பற்றி விரிவான பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பெட்ரோல் விலையை 5 ரூபாயாக குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். அதில் மேலும் இரண்டு ரூபாய் குறைப்பு என்னாயிற்று என்பது தெரியவில்லை. டீசல் விலை குறைப்பு பற்றி மூச்சே காட்டவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு லிட்டருக்கு 20 ரூபாய் வரை விலையை குறைக்க முயற்சித்தால் அதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஒப்புக்கொள்ளவில்லை.

மாறாக, முதலில் 2014-ல் இருந்தது போல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்கட்டும். பின்பு 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாதிரி பெட்ரோல், டீசல் விலை தானாக விலை குறைந்துவிடும் என்று வேடிக்கையான கோரிக்கை வைக்கிறார்.

நகைக்கடன் தள்ளுபடி

நகைக்கடனை பொறுத்தவரை திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் 5 பவுன் நகையை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். ஆனால் பல்வேறு கடும் நிபந்தனைகளை விதித்து 14 லட்சம் பேருக்குதான் நகைக் கடனை ரத்து செய்துள்ளனர். இவர்களில் 10 லட்சம் விவசாயிகள் உள்பட 34 லட்சம் பேருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

பால் விலையை குறைத்தார்கள் ஆனால். ஆவின் பால் பொருட்களின் விலையை பல மடங்கு அதிகரித்து விட்டார்கள்.

டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று கூறிவிட்டு மதுவின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் 40 ஆயிரம் கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயித்து விட்டனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் கமிஷன் தராத விவசாயிகளிடம் நெல்லை வாங்காமல் அலைக்கழிப்பது, மழைநீரில்
9 லட்சம் மூட்டைகள் வரை நனைந்து வீணானது போன்றவைகளும் மறக்க முடியாதவை.

கவலை

கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்புக்காக வாங்கிய கல்விக் கடனும் ரத்து செய்யப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இதுதவிர நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று உதயநிதி மேடைதோறும் பிரச்சாரமும் செய்தார். ஆனால் இது தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி, அவர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவே, திமுக அரசு படாதபாடு பட்டதை காணமுடிந்தது.

சுருக்கமாக சொல்லப்போனால், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், மாதாந்திர முறையில் மின் கட்டணம் கணக்கீடு ஆகிய வாக்குறுதிகளை திமுக அரசு கடந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றவில்லை” என்று அந்த சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்

Views: - 693

0

0