வருமானம் வந்தால் போதும் என திமுக நினைக்கக்கூடாது.. குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் கும்பல் : அண்ணாமலை வார்னிங்!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 11:01 am

வருமானம் வந்தால் போதும் என திமுக நினைக்கக்கூடாது.. குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் கும்பல் : அண்ணாமலை வார்னிங்!

குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு.

தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?