அவசரப்பாடாதீங்க.. சட்டப்பேரவையில் ஓபிஎஸ்க்கு எங்கு இருக்கை? நாளை முக்கிய அறிவிப்பு : சபாநாயகர் அப்பாவு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 11:25 am

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்த பிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

அன்று அவை ஒத்திவைக்கப்பட்டு, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக்குழு, பேரவைத்தலைவர் மு.அப்பாவு தலைமையில் கூடும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகாரமாகி வருகிறது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து சுப்ரிம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஓ. பன்னீர் செல்வம் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், அ.தி.மு-வின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்கவேண்டும் என ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோன்று, எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது.

இந்த கடிதங்கள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு நாளை பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இரு தரப்பினரும் கடிதம் கொடுத்திருக்கு நிலையில் சபாநாயகர் அப்பாவு எடுக்கும் முடிவை பொறுத்து இருக்கைகள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்து பார்த்தபின் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?