திமுக ஆட்சியில் தொடரும் லாக்-அப் மரணம்.. சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 9:18 am
Quick Share

மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்டப்படி விசாரணை தேவை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், அடுத்தடுத்து நிகழும் லக்-அப் மரணங்கள் போலீசாரின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் என்பவரை விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தொடரும் சிறை மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

EPS - Updatenews360

இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 555

0

0