மீண்டும் அதிமுக ஆட்சி மலர பாடுபடுவேன்… கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இபிஎஸ் நன்றி!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 6:16 pm
EPS Happy -Updatenews360
Quick Share

சென்னை ; அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்று தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அதிமுக இடைக்கால தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மக்கள்‌ அனைவரும்‌ எவ்வித இன்னலுக்கும்‌ ஆளாகாமல்‌, வளமுடன்‌ வாழ வேண்டும்‌ என்ற உயர்ந்த நோக்கத்தில்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌’” என்னும்‌ மாபெரும்‌ மக்கள்‌ பேரியக்கத்தைத்‌ தொடங்கி, மகத்தான மக்கள்‌ பணியாற்றி பல்வேறு சாதனைகளைப்‌ படைத்தார்‌.

தொடர்ந்து, இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, தீயசக்தி திமுக-வால்‌ கொடுக்கப்பட்ட பல்வேறு இன்னல்களையும்‌, சோதனைகளையும்‌ தகர்த்தெறிந்து, சாதனைகளாக்கி மக்கள்‌ நலன்‌ ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்‌ கொண்டு, தனது உடல்‌ நலனையும்‌ பொருட்படுத்தாமல்‌ அல்லும்‌ பகலும்‌ அயராது உழைத்து மக்கள்‌ சிறப்புடன்‌ வாழ்வதற்கு மகத்தான திட்டங்களைத்‌ தந்தார்‌.

அதே போல்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க சாதனைகளையும்‌ பெற்றுத்‌ தந்தார்‌. மாண்புமிகு அம்மா அவர்களின்‌ நல்லாசியோடு ஆட்சிப்‌ பொறுப்பேற்ற நான்‌, கழக உடன்பிறப்புகள்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ பேராதரவோடு சிறப்பானதொரு நல்லாட்சியை வழங்கினேன்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ கடந்த காலங்களில்‌ பல்வேறு சோதனைகளை சந்தித்து, அவற்றையெல்லாம்‌ வென்றெடுத்து தமிழ்‌ நாட்டு மக்களுக்கு சிறப்பு மிக்க நல்லாட்சிகளைத்‌ தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்‌, நம்‌ இருபெரும்‌ தலைவர்களின்‌ நல்லாசியோடும்‌, கழக நிர்வாகிகள்‌
மற்றும்‌ ஒன்றரைக்‌ கோடிக்கும்‌ மேற்பட்ட கழகத்‌ தொண்டர்களின்‌ நல்வாழ்த்துகளோடும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இடைக்காலப்‌ பொதுச்‌ செயலாளர்‌ பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன்‌.

கழக இடைக்‌காலப்‌ பொதுச்‌ செயலாளராகப்‌ பொறுப்பேற்ற நான்‌, இன்று தலைமைக்‌
கழகத்திற்கு வருகை தந்தபோது, தலைமைக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, சார்பு அமைப்புகளின்‌ நிர்வாகிகள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, முன்னாள்‌ அமைச்சர்கள்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, கழக செய்தித்‌ தொடர்பாளர்கள்‌, மாவட்டக்‌ கழக நிர்வாகிகள்‌, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ சார்பு அமைப்புகளில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌, கிளைக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, நகர, பேரூராட்சி வார்டு கழகச்‌ செயலாளர்கள்‌, மாநகராட்சி வட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ கூட்டுறவு சங்கங்களின்‌ பிரதிநிதிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ உற்சாகம்‌ பொங்க வரவேற்று, வாழ்த்து தெரிவித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தமிழ்‌நாடு சட்டமன்றப்‌ பேரவை பொதுத்‌ தேர்தலின்‌ போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்குத்‌ தந்து, புறவாசல்‌ வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்ற முடியாமல்‌ திணறிக்‌ கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில்‌ மக்கள்‌ பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்‌.

“எனக்குப்‌ பின்னாலும்‌, இன்னும்‌ எத்தனை நூற்றாண்டுகள்‌ வந்தாலும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மக்களுக்காகவே இயங்கும்‌” என்று சூளுரைத்த நம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும்‌ பொறுப்பு நமக்கு உள்ளது.

கழக நிறுவனத்‌ தலைவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரின்‌ நல்லாசியோடும்‌, கழக நிர்வாகிகள்‌ மற்றும்‌ கழக உடன்பிறப்புகளின்‌ ஒத்துழைப்போடும்‌, சிறந்த முறையில்‌ கழகத்தை வழிநடத்தி, மீண்டும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல்‌ பாராமல்‌ அயராது பணியாற்றுவேன்‌ என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்‌, எனக் கூறினார்.

Views: - 162

0

0