தனி நீதிபதியின் தீர்ப்பால் செயல்படாத நிலையில் அதிமுக… OPS உடன் இனி இணைந்து செயல்பட முடியாது ; நீதிமன்றத்தில் இபிஎஸ் திட்டவட்டம்..!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 12:57 pm
Quick Share

பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது, அனைத்து தரப்பினரும் வாதங்களை முன்வைக்க தலா ஒரு மணிநேரம் அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில், “தனி நீதிபதி ஜெயசந்திரன், ஒ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.

அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் தரப்புக்கு ஆஅதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஒ.பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதன எதிர்கட்சியாக அதிமுக செயல்பட முடியாதநிலை உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் காரசாரமான வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 408

0

0