கொஞ்சம் அசால்ட்.. அதனாலத்தான் திமுக ஆட்சி… இந்த முறை தப்பாது ; அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 11:49 am
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு போனஸ் கொடுத்ததாகவும், கலைஞருக்காக பல திட்டங்களை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மதுரை வந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :- சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சி அமைந்து விட்டது. 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக வெல்லும். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கலைஞருக்கு நினைவு மண்டபம், நூலகம், எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவு சின்னம் அமைத்தது ஆகியவை தான் ஸ்டாலின் செய்த சாதனை. அவரது அப்பாவுக்காக பல திட்டங்களை செய்த ஸ்டாலின், மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என சொல்லி பொய்யை மெய்யாக்க முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழங்கி வருகின்றன. திருமண உதவி திட்ட தொகையை உயர்த்துவோம் என சொல்லிய ஸ்டாலின், இன்று திட்டத்தையே மாற்றி விட்டார். முதியோர் உதவித் தொகை வழங்குவதில் ஸ்டாலின் அரசியல் பார்க்க கூடாது.

சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என தேர்தல் அறிக்கையில் சொன்னார் ஸ்டாலின். ஆனால், சொத்து வரியை 100% உயர்த்தி உள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழகத்தை விட குறைவான அளவில் மின் கட்டணத்தை வைத்துள்ளார்கள். தமிழக மக்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் இரண்டு போனஸ் கொடுத்துள்ளார்கள். அது சொத்து வரி, மின் கட்டண உயர்வு தான். ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்துள்ளார்கள்.

ஓசியாக பேருந்தில் செல்வதாக மக்களை அமைச்சர் பொன்முடி கொச்சை படுத்துகிறார். இது தான் திராவிட மாடல். அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தி உள்ளார்.

38 திட்டங்கள் அறிவித்து அதற்கு 38 குழுக்கள் அமைத்து உள்ளார். குழு அமைப்பதற்கு விருது அளிக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

Views: - 466

0

0