ஓபிஎஸ் மகன் மீண்டும் தனது உண்மை முகத்தை காட்டி விட்டார் ; இபிஎஸ் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 10:42 am
Quick Share

திமுகவுடன் ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் தொடர்பை, அவரது மகன் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்பொழுது செய்திகளை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நீதியரசர் இடம் சென்று இருக்கிறார்கள். நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம்,” என்றார்.

மேலும், புதுமைப் திட்டத்திற்கு ஓபி ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, திமுகவில் தொடர்பு இருக்கு என்பதை அவர் காட்டிவிட்டார். திமுகவுடன் உள்ள நெருக்கத்தை சரிப்படுத்தியுள்ளார். திமுகவில் எப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதோ, அதேபோல்தான் கூட்டுறவு தேர்தலும் நடைபெறும். நியாயமாக தேர்தல் நடைபெறாது, என்றார்

இலவச திட்டங்களால் எந்த பயனும் இல்லை, இதனால் நாடு வளராது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. அது அவரது கட்சியின் நிலைப்பாடு. ஒரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அதிமுகவிற்கு என ஒரு கொள்கை இருக்கிறது, என்றார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு அதிகமான நிதி தமிழகம் தான் கொடுத்திருக்கிறது. எனவே, இது ஆன்மீக பூமி தான் என அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அது அவர்களது சொந்த விருப்பம். என்னைப் பொறுத்தவரை ஆன்மிகம் தான். நீங்க சொல்லுங்க… இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அவரவர்களுக்கு அவரது மதம் புனிதமானது. அந்தந்த தெய்வம் அவர்களுக்கு புனிதமானது. என்னைப் பொறுத்தவரை எல்லா சாமியும் கும்பிடுவேன். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

அதிகமாக போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இந்த அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் அதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறது இந்த அரசு.

சாலைகள் பாலங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் தான். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம் தான். இதற்கும் “ரிப்பன் கட் பன்னி” திறந்து வைப்பார்.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், பரமேஸ்வரி, மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Views: - 487

0

0