கருணாநிதி மறுத்ததை செய்து காட்டியவர் எம்ஜிஆர்… அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிவர் புரட்சித் தலைவர் : தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்…!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 12:23 pm
EPS - Updatenews360
Quick Share

சென்னை : இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சியை வழங்கினார். சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர்.

எம்.ஜி.ஆர். தான் உழைத்து சேகரித்த செல்வத்தை, ஏழை, எளியோர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் வழங்கிய வள்ளல் பெருந்தகை. தனது திரைப்படப் பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று, அவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர். 1972-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது.

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது. இந்த மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம், என தெரிவித்தார்.

Views: - 297

0

0