அடுத்தடுத்து பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… என்ன காரணமா இருக்கும்..? விசாரணைக்கு உத்தரவிட்டு மத்திய அரசு அதிரடி

Author: Babu Lakshmanan
30 March 2022, 6:42 pm
Quick Share

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தீவிபத்துக்குள்ளாகி வருவதால், இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக், ஒகினாவா உளிட்ட பைக்குகள் அடுத்தடுத்து தானாகவே தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, சென்னை மாதாவரம் பகுதியில் சிவப்பு நிற ப்யூர் எலக்ட்ரிக் பைக் ஒன்று நேற்று முன்தினம் சாலையோரத்தில் கொளுந்து விட்டு எரிந்தது.

இதன்மூலம், கடந்த சில தினங்களில் மட்டும் 4வது EV பைக் தீப்பற்றி எரிந்து, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, ஸ்கூட்டர் தீப்பிடித்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருவதாகவும், சேதமடைந்த வாகனம் கிடைத்தவுடன் அதில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட Pure EV நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி டார்க் ப்ளூ நிற ஓலா எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக, ஆய்வு செய்து வருவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் கூறியிருந்தார்.

இதேபோல, மார்ச் 25ம் தேதி தமிழகத்தில் ஒகினாவா பைக் சார்ஜ் போட்டிருந்த போது ஏற்பட்ட தீவிபத்தில் தந்தையும், மகளும் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வாகனத்தை சார்ஜ் செய்வதில் அலட்சியமாக இருந்ததால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிதத்து. முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேபோல, மார்ச் 28ம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த ஓகினாவா நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக பிரபல வாகன ஊடகமான Motowagon வெளியிட்டிருந்தது. ஆனால், இதுபற்றி எந்த அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

இந்தியாவில் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வாகன தீவிபத்து பற்றி விசாரணை நடத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தீவெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அணுகியுள்ளது.

Views: - 850

0

0