வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை… CM ஸ்டாலின் வயதில் சிறியவர்.. அனுபவத்தில் உயர்ந்தவர் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

Author: Babu Lakshmanan
2 March 2023, 12:58 pm

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தற்போது வரை 6 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது :- முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்கு திமுக அமைச்சர்கள், கனிமொழி, உதயநிதி, கமல் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியின் பெரும் பங்கு முதல் அமைச்சரையே சாரும். தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது. இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன், என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!