‘முதல்ல அவங்க சொல்லட்டும்’… பாஜகவுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் : டெல்லி சிக்னலுக்காக வெயிட்டிங்கில் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
30 ஜனவரி 2023, 10:25 காலை
Quick Share

சென்னை : ஈரோடு சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் பாஜகவின் முடிவுக்காக ஓ.பன்னீர்செல்வம் காத்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார். அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரதான எதிர்கட்சியான அதிமுக கூட்டணியில், கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது. தற்போது, அதிமுக போட்டியிடுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரி வருவதால், இதுவரையில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து, தேர்தலுக்கான வேளையில தீவிரம் காட்டி வருகிறது.

அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும், ஒருவேளை பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார். பாஜகவும் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ், அதிமுகவுக்கு போட்டியாக பாஜக தனித்து களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கூட்டணி தர்மத்தை என்றும் பாஜக மீறாது என்றும் அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதனால், பாஜகவின் ஆதரவு இபிஎஸ்-க்கா..? ஓபிஎஸ்-க்கா..? என்ற குழப்பம் நிலவி வருகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று வெளியாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, பாஜக தனது நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. பாஜகவின் அறிவிப்பை பொறுத்து, தனது நிலைப்பாடு என்ன..? என்பதை தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படுகிறதோ, அவர்களுக்கு பாஜக ஆதரவு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒருவேளை சின்னம் முடக்கப்பட்டால், பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே, அக்கட்சியின் முடிவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளார். இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 422

    0

    0