மணல் திருட்டை வீடியோ எடுத்த EX ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு… திமுக ஆட்சி மக்களுக்கா..? சமூக விரோதிகளுக்கா..? அண்ணாமலை ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 2:13 pm

வேலூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதி அவர்களை, சமூக விரோதிகள் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. அதிகாரிகளை அவர்களது அலுவலகத்திலேயே கொலை செய்வதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு.

அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின்
தெளிவுபடுத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே