ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 6:29 pm

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் நெருக்கடி : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 31-ந்தேதி ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். இதனிடையே ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து கடந்த 2-ந்தேதி ராஞ்சி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவரது அமலாக்கத்துறை காவல் கடந்த 7ம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் விசாரணை முடிவடையாததால் ஹேமந்த் சோரனின் காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!