கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்தவர் நடிகர் அஜித்… எனக்கும், அஜித்துக்கும் ஒரே வேவ் லென்த் ; ஜெயக்குமார் சொன்ன REASON..!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 5:18 pm
Quick Share

திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அப்போது பொது மக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது :- உலகம் முழுவதும் போற்றப்படும் நாள் மே தினம். இப்போது உழைப்பாளர் வர்க்கத்திற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அகில உலக தொழிலாளர் சம்மேளனம் முன்னெடுத்தது. ஆனால் அதற்கு முன்பாக தொழிலாளர் வர்க்கம் கொத்தடிமைகள் போல முதலாளி வர்க்கத்தால் நடத்தப்பட்டார்கள். முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து சிகாகோ நகரத்தில் நடந்த புரட்சியில் தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி பெற்ற தினம் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம்.

இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தான் முதன் முதலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார். அவருக்கு எங்களது வீரவணக்கம். அதிமுக தொழிலாளர்களின் உற்ற தோழனாக இருந்தது. ஆனால் திமுக தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தேர்தல் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அதன் பலன்களை அனுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கான நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் தொழிலாளர்கள் தட்டேந்தி பிச்சை கேட்டு போராடும் நிலைமையில் உள்ளனர்.

தொழிலாளர் தினத்தை கொண்டாடக்கூடிய ஒரு தகுதி படைத்த இயக்கம் அதிமுக தான். தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். எதையே எதிர்கொள்ளும் எந்த சூழ்நிலையும் எதிர்கொண்டு இடம் பொருளை எதிர்பார்க்காமல் தன் கருத்துக்களை எடுத்து வைக்கும் என் அலை வரிசையில் உள்ளார் என்பது எனக்கு சந்தோஷம்.

திரைப்பட தயாரிப்பாளர்களை முழுங்கி சாப்பிடுகிறது ரெட் ஜெயிண்ட் மூவிஸ். விஷால் படம் வெளியிடாமல் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார் என்பது தெரியும். பெரிய திமிங்கலமாக இருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட தயாரிப்பாளர்களை நசுக்கி, யாரும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

அந்த காலத்தில் நடிகர் அஜித், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு திரைப்படத் துறையினர் கட்டாயமாக அழைக்கப்பட்டனர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் படம் வெளியாகாது என பல நெருக்கடிகள் இருந்தது. அனைவரும் பயந்தனர். ஆனால் அஜித் நேரடியாக சென்று மேடையில் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன் என கூறினார். அதை போற்றுகின்ற வகையில் தான் வாழ்த்து கூறினேன். விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க: வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

இப்போது உச்சநீதிமன்றம் செல்வது காலம் தாழ்த்திய செயல். முன்பே சென்றிருக்க வேண்டும். நம் உரிமைகள் மறுக்கப்படும் போது உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்றோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட திமுகவிற்கு தைரியம் உண்டா?? இப்போதுகோடை காலத்தில் வீரன் பாட்டிலும் கோதுமை பீரும் கிடைக்கிறது. குடிக்க தண்ணீர் இல்லை என்றால் கோதுமை பீர் சாப்பிடுங்கள் என்பது புதிய அறிமுகம் என்று விமர்சித்தார். குடிநீர் பிரச்சனையை தீர்க்க முற்போக்கான திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் செய்யவில்லை.

குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடையாது. ஆனால் ஒரு முதலமைச்சர் கோட்டையில் இருந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவரின் கடமை. ரோம் நகரம் தீ பிடித்து எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், முதல்வர் கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடுகிறார் என்று விமர்சனம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. 48 மணி நேரத்தில் பத்து கொலைகள். கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்கள் கிடைக்கிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கூட்டணிக்காக கர்நாடக செல்லும் முதல்வர், காவிரி தண்ணீரை பெற செல்ல வழி தெரியவில்லை. இப்போது காலம் தாழ்த்தி நீதிமன்றம் செல்வது மக்களை ஏமாற்றும் செயல். பாடத்திட்டத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் தான் இருப்பார்கள். ஆனால் கருணாநிதி வரலாற்றில் இடம் பிடித்தவரா?. ஊழலுக்காக களைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சி என்று வரும். இப்படிப் பட்டவரின் வரலாறு பாடத்திட்டத்தில் வர வேண்டுமா??

பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பிரசனை வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் கூட 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு நாள் கூட செயலிழந்து கிடையாது, ஆனால் வாக்கு பதிவு எந்திரங்கள் உள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயலிழக்க காரணம் என்ன?, டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்

மாற்றி மாற்றி வாக்குப் பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான். உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். மாற்றி மாற்றி கூறினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். பாஜகவை பொறுத்தவரை சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. உத்தமர் காந்தி போன்று பேசுவார்கள் ஆனால் தேர்தல் பத்திரத்தில் 16000 கோடி எப்படி வந்தது?

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது , அந்த 500 கோடி ரூபாய் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாகும். அதில் பல்வேறு தரப்பிற்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்த சாலைகள் அமைக்கப் படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும். முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஏதோ, ஒரு பேராசிரியரின் கையெழுத்து பெற்ற ஒரு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் கொடுக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது மோசடி.500 கோடி ரூபாய் மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வருவதாக குற்றம் சாட்டினார்.

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால், அதை விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு?, நல்லது செய்ய அரசியல் ஒரு களம். அப்படி அஜித் வந்தால் நாங்கள் வரவேற்போம், என்று தெரிவித்தார்.

Views: - 165

0

0