தேர்தலில் திமுகவினர் பதிவு செய்த கள்ள ஓட்டு.. சென்னை, கோவையில் வன்முறைகள் : ஆதாரத்துடன் புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 2:16 pm
EPS Complaint - updatenews360
Quick Share

சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆனால் சென்னையில் குறைவான வாக்குகளே பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து,தேர்தலில் பதிவான வாக்குகள் வருன்ற பிப்.22 ஆம் தேதி எண்ணப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன என்றும், குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக,சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை,சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன.குறிப்பாக,சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் தோல்வியை தழுவும் பயத்தின் காரணமாக சென்னை மாநகராட்சிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் அத்துமீறி புகுந்து இப்படி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளார்கள்.கோவை,சென்னை மாநகராட்சிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை .

காவல்துறையினர் முன்னிலையிலேயே திமுகவினர் அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணம் பட்டுவாடா செய்தார்கள்.மேலும் திருவல்லிக்கேணியில் உள்ள 114,115 வது வார்டுகளில் திமுகவினர் கள்ள ஓட்டு லுத்தியுள்ளார்கள்.மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.

குறிப்பாக,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால்தான், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை “,என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Views: - 782

0

0