விஜயகாந்துக்கு என்ன ஆச்சு..? ஒரே நாளில் அடுத்தடுத்து அறிக்கையை வெளியிட்ட மருத்துவமனை ; பைப்பாஸ் மாஸ்க் முறையில் சிகிச்சை…!!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 6:42 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிய அவர், குடும்பத்தின் அரவணைப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடந்த 18ம் தேதி விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

இன்று மதியம் விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விஜயகாந்த்‌ அவர்களின்‌ உடல்நலத்தில்‌ நல்ல முன்னேற்றம்‌ காணப்பட்டது. எனினும்‌ கடந்த 24 மணி நேரத்தில்‌ அவரது உடல்நிலை சீரான நிலையில்‌ இல்லாததால்‌, அவருக்கு நுரையீரல்‌ சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர்‌ விரைவில்‌ பூரண உடல்நலம்‌ பெறுவார்‌ என்று நம்புகிறோம்‌. அவருக்கு இன்னும்‌ 14 நாட்கள்‌ மருத்துவமனையில்‌ தொடர்‌ சிகிச்சை தேவைப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீவிர இருமல் தொந்தரவால் நடிகர் விஜய்காந்திற்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைப்பாஸ் மாஸ்க் எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்சிஜன் மூலமாக தற்போது கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட சிகிச்சை தொடர்பாக விஜயகாந்தின் குடும்பத்தாருடன் மருத்துவக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது விஜயகாந்த் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?