பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை : ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனை கண்காணிக்கும் காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 8:47 am

செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்து பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமான தளம் செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 6 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ்பவனுக்குச் சென்று அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நிகழ்ச்சிக்குப் பின் சுமார் 11.30 மணியளவில் மீண்டும் சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து 12 மணியளவில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையார் ஐ.என்.எஸ் ஆகிய இடங்களைச் சுற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள், 26 காவல் துணை ஆணையர்கள் என 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

அதே போல பிரதமர் வருகையையொட்டி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

என்ன மாதிரியான செயல்பாடு, வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்து நடவடிக்கை எடுப்போம், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முழுக்க கண்காணிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!