வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு… அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் போட்ட கண்டிப்பான உத்தரவு

Author: Babu Lakshmanan
12 December 2022, 10:05 pm

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, 2008ல் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது, முன்னாள் டிஜிபியும், உளவுத்துறை ஐஜியாக இருந்த ஜாபர் சேட் மனைவிக்கு சமூக சேவகர் என்ற ஒதுக்கீட்டில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது.

அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வணிக வளாகம் கட்டியது, வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது என ஜாபர் சேட் மனைவி மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்குகளில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் கடந்த மாதம், வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை அவர் சந்திக்கவும் உத்தரவிட்டது.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?