இது நம் மானப்பிரச்சனை… காருக்கு பதிலாக களை அறுக்கும் கருவியை கொடுங்க… தங்கர் பச்சான் உருக்கமான கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 9:58 pm

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் பரிசு வழங்கும் முறைக்கு இயக்குநர் தங்கர்பச்சான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா, குண்டா, நாற்காலி, மிதிவண்டி, பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பரிசுகளை வழங்கி வருவது நடைமுறையில் இன்னும் உள்ளதை நாம் காண்கிறோம்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் பரிசாக கார் தரப்படுகின்றது. இது அதைக்காட்டிலும் பரவாயில்லை என நாம் நினைத்தாலும், இவ்வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் இத்தகையப் பரிசுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை மூன்று ஆண்டுகளாக நான் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டே வருகின்றேன்.

இந்த ஆண்டு பரிசுகளை அறிவிப்பதற்கு முன் ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் அந்த காரினைக்கொண்டு எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களால் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட மட்டும் தான் முடியும். ஆனால், நம் வீரர்களால் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்!

திரைப்பட நடிகர்களை உண்மையான கதாநாயகனாக எண்ணிக்கொண்டு மதுவுக்கும், போதைப்பொருளுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் கூட்டத்தில், இந்த வீரர்கள் மட்டும்தான் தமிழர்களாகிய நமது மானம் மரியாதையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசல் வீரர்களை வளர்த்தெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நாம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதனையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த நிலையில் தான் தனது முயற்சியின் மூலமாகவே பயிற்சி அடைந்து போட்டியில் பங்கே
ற்று நம் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் இவ்வாண்டிலிருந்தே அறிவிக்கலாம். நம் மரபு விளையாட்டுக்கள் அத்தனையும் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வீரர்கள் இருக்கும் வரைத்தான் ஜல்லிக்கட்டு மாடுகளும் இருக்கும்! ஜல்லிக்கட்டு மாடு இல்லாமல் போனால் நம் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு இல்லாமல் அடியோடு அழிந்தே போகும்! நிலத்துடன் பிணைந்த இவ்வீரர்களின் பொருளாதாரம் உயரும் பொழுதுதான் அதற்கான பயிற்சியையும் ஊக்கத்தையும் அவர்களால் பெறவும் முடியும்.

வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான், அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும், வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். பொருளாதார முன்னேற்றத்தை அவர்களே அடையும் பொழுது கார் வாங்குவது என்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். நாம் அனைவரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை அடையலாம்! அவர்களின் நலன் தமிழ் பண்பாட்டின் நலன் கருத்திற்கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!