எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நீட் ஒழிப்புக்கு அழைப்பு விடுத்த உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan22 அக்டோபர் 2023, 10:26 காலை
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நீட் ஒழிப்புக்கு அழைப்பு விடுத்த உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி!!
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய உதயநிதி, தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் விலக்குக்காகவும் அதிமுக இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதுதான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்பொழுது நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாகச் சொல்கிறீர்கள். அதிமுக-வுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதிமுகவினரும் வாருங்கள். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம்” என்றார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்” என்ற ஒரு பழமொழி உண்டு.
இதையே, “எந்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்.. சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்…” என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடலைப் போன்று… நீட் நுழைவுத் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவேன் என்று வாய் வீரம் காட்டிய இன்றைய முதலமைச்சரும், அவருடைய வாரிசும். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 29 மாதங்களில், நீட்டை ஒழிப்பதற்காகப் போடவேண்டிய கையெழுத்தை எப்படி போடுவது என்பதை மறந்துவிட்டார்களோ என்று தமிழக மக்களும், மாணவச் செல்வங்களும் கேலி பேசி வருகின்றனர்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், நீட்டை ஒழிக்க முதல் கையெழுத்து போடுவேன் என்று தொடர்ந்து பேசி, ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், முதல் கட்டமாக, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதனால் எந்த பயனும் இல்லை என்ற பிறகு, மீண்டும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20 அன்று மதுரையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததை முன்கூட்டியே தெரிந்துகொண்ட விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய வாரிசு, தமிழகமெங்கும் நீட்டிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.
விரைவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை அறிந்து, மீண்டும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ள வாரிசு, இன்று நீட்டிற்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், அதிமுக அரசு நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து, ஆண்டுதோறும் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் கனவை நனவாக்கி உள்ளோம்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி, அப்பாவி மாணாக்கர்களின் ஆசையைத் தூண்டி, அவர்களின் உயிரைப் பறிக்கும் ‘வேலையில்தான் இந்த விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதே தவிர, உருப்படியாக எதையும் செய்வதுபோல் தெரியவில்லை. “கொத்திய பாம்பே, விஷத்தை எடுப்பது போல’ இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் – திமுக உள்ளிட்ட 26 கட்சிகளின் கூட்டணி, மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்று விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயாரா? அல்லது “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுடன் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கத் தயாரா?
அல்லது குறைந்தபட்சம் “இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நீட்டிற்கு எதிராக கையெழுத்தாவது வாங்குவாரா? என்று தமிழக மக்களிடமும், மாணவச் செல்வங்களிடமும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், பின்பும் வாயிலேயே வடை சுடுவதை வழக்கமாகக் கொண்ட விடியா திமுக அரசின் முதலமைச்சர், நீட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகள் அளித்து மாணவர்களை ஏமாற்றுவதைக் கைவிட வேண்டும்.
கொள்ளையடிப்பதற்காகவே பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு மந்திரி உதய(வா) நிதியும் தங்கள் இயலாமையை மறைக்க பல்வேறு ஓரங்க நாடகங்களை நடத்தி வருவது வெட்கக்கேடானது.
நீட் தேர்வு விவகாரத்தில் கோமாளி வேஷம் கட்டும் விளையாட்டு அமைச்சர், உண்ணாவிரத நாடகத்தைத் தொடர்ந்து, தற்போது நீட்டுக்கு எதிராக மக்களிடம் நீட் விலக்கை வலியுறுத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்து, மீண்டும் தமிழக மக்களிடையே ஓரங்க நாடகம் ஒன்றை அரங்கேற்றப் பார்க்கிறார்.
நீட்டை விலக்க இந்த மகானுபாவர் யாரை வலியுறுத்தப் போகிறார்? நீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த ஏமாற்றுக்கார அரசு தயக்கம் காட்டுவது ஏன்? இந்த கையாலாகாத தி.மு.க ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி அப்பாவி மாணவ, மாணவிகள் உயிரை விட்டதுதான் மிச்சம். தொடர்ந்து, மாணவர்களை வஞ்சிக்கும் உதய(வா) நிதியின் பொம்மலாட்ட ஜாலங்களை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட்டை வைத்து அரசியல் நடத்துவதை கைவிட்டுவிட்டு, தங்கள் இயலாமைக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, மாணவர்களின் உயிரோடு விளையாடுவதை இந்த விடியா ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
0
0