பட்டியலினத்தவருக்கு மின் இணைப்பு கொடுக்க மின்சாரத்தை துண்டித்ததால் ஆத்திரம்… அதிகாரிகளை அரிவாளால் துரத்திய நபர்கள்… அதிர்ச்சி வீடியோ

Author: Babu Lakshmanan
2 February 2022, 6:00 pm
Quick Share

கரூர் : கரூர் அழகாபுரி பகுதியில் மின் இணைப்பு வழங்க சென்ற அதிகாரிகளை அரிவாளால் வெட்டுவதற்காக 2 பேர் விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரியை சேர்ந்தவர் ரெங்கன் மகன் முருகேசன் (47). இதேபோல் இவரது அண்ணன் கணேசன் (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் கணேசன் வசிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க காவல்காரன்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மனு அளித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து கடந்த 27 ஆம் தேதியன்று கணேசன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தின் உதவி பொறியாளர் உள்பட 4 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மின் இணைப்பு வழங்குவதற்காக அந்த பகுதியில் மின்துறை அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர்.

இதனால் அருகில் வசிக்கும் சிவா மற்றும் சக்தி என்ற இரு வாலிபர்கள் மின் இணைப்பை எப்படி துண்டிக்கலாம் என்று மின்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மின் இணைப்பு வழங்குவதற்காக தற்காலிமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்றும், பணிகள் முடிந்தவுடன் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறி, சிவா மற்றும் சக்தி ஆகிய இருவரையும் சமாதானம் செய்ததாக தெரிகிறது. இதற்கு உடன்படாத வாலிபர்கள் அரிவாளை எடுத்துக்கொண்டு மின் துறை அதிகாரிகளை துரத்தி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மின் துறை பணியாளர்கள் அனைவரும் அருகில் இருந்த முருகேசன் வீட்டிற்கு உள்ளே சென்று உள்ளனர். மின்துறை பணியாளர்களை அரிவாளுடன் துரத்தி வெட்ட சென்ற தகவல் அறிந்து, அருகில் இருந்த பொதுமக்கள் மின்துறை பணியாளர்களை காப்பாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த சிலர் மின்துறை பணியாளர்களை அரிவாளுடன் துரத்தி வெட்ட சென்ற சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் முருகேசன் தனது வீட்டில் மின் துறை பணியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவர் வீட்டை அடித்து உடைத்து வீட்டில் இருந்த குடிநீர் பைப், இரு சக்கர வாகனம், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து காவல்காரன்பட்டி மின்துறை அதிகாரிகள் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை செய்து வருகின்றனர். தோகைமலை அருகே மின் இணைப்பு வழங்க சென்ற அதிகாரிகளை அரிவாளுடன் துரத்தி வெட்ட சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 651

0

0