குஜராத் மாடலை பின்பற்றுகிறதா திராவிட மாடல்..? கேஎஸ் அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 2:33 pm
Modi And Stalin - Updatenews360
Quick Share

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாக்களில் முக்கியமானது துணைவேந்தர் நியமன மசோதாதான். துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வகை செய்யும் விதமாக, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் பொன்முடி, இதுபோன்ற சட்டங்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் தாக்கல் செய்திருப்பதாகவும், குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டது எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்த மசோதாவுக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே, குஜராத்தில் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2007-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2010-இல் சில பரிந்துரைகளைச் செய்தது. அதில், ‘ஆளுநரின் அதிகாரங்களும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகளும்’ என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்து பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக ஆளுநர் நீடிப்பதன் மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் தமது விருப்புரிமையின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதால் மாநில அரசோடு மோதல் ஏற்படுகிற சூழல் உருவாகிறது. அரசமைப்பு சட்டவிதி 163(1)-ன் கீழ் அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய ஆளுநர், துணைவேந்தர்கள் நியமனத்தில் அமைச்சரவையின் பரிந்துரையைப் புறக்கணிக்கிற வகையில் செயல்படுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று பூஞ்சி குழு தெளிவாகக் கூறியிருந்தது.

இந்த அடிப்படையில்தான் பல மாநிலங்களில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 2011-இல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, இதே பூஞ்ச் குழு பரிந்துரையின்படி, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆளுநர் வேந்தராக நீடிக்க முடியாத நிலையை உருவாக்கினார், என்று குறிப்பிட்டுள்ளார்.

கேஎஸ் அழகிரி இதுபோன்ற அறிக்கை வெளியிட்டதன் மூலம், குஜராத் மாடலை திராவிட மாடல் பின்பற்றுகிறதா..? என்பதைப் போலத்தான் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

குஜராத்தில் மோடி பின்பற்றிய அதே உத்தியை தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பின்பற்றி இருப்பதை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 622

0

0