செந்தில்பாலாஜி தம்பியுடன் ரகசிய சந்திப்பு..? செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டென்ஷனான அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 10:04 am

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டி புதன்கிழமை இரவு விமானம் மூலம் நாடு திரும்பினார். சென்னை வந்தடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து தனது பயணத்தில் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றி எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதற்கு பாராட்டு தெரிவித்து, லண்டனில் உள்ள சைவ அமைப்புகள் சார்பில் பாராட்டுக் கடிதம் வழங்கியுள்ளனர் என்றும் அதனை பிரதமரிடம் நேரில் ஒப்படைக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

மேலும் தமிழகத்தில் தான் மேற்கொள்ள இருக்கும் நடைபயணம் குறித்துப் பேசிய அவர், நடைபயணத்தின் தொடக்க நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள இருப்பதாவும் அவரது வருகையைப் பொறுத்து தேதி மாற்றப்படலாம் என்றும் கூறினார். நடைபயணத்துக்கு முன் தானும் மற்றொரு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் கூறினார். சிதம்பரம் கோயில் விவகாரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக சிதம்பரம் கோயிலை தொடர்ந்து பிரச்சினையில் வைத்திருப்பதாவும் மாதம் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பற்றி அடுத்த செய்தியாளர் சந்திப்பில் விரிவாகப் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை அண்ணாமலை ரகசியமாக சந்தித்தாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனே அண்ணாமலை, இந்தத் உங்களுக்கு யார் தகவல் கொடுத்தது என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். இது முட்டாள்தனமான கேள்வி என்றும் சாடிய அண்ணாமலை, எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைப் போல கேள்வி கேட்டக் கூடாது, ரோட்டில் நின்றி டீ குடித்துக்கொண்டிருப்பவர் போல கேட்கக் கூடாது என்று சீறினார்.

கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க நான் என்ன காமெடியான என்ற அண்ணாமலை, தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் திமுகவிடம் ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு தன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்பாக ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேட்ட கேள்வியால் அண்ணாமலை கடுப்பாகி கத்தினார். இப்போது மீண்டும் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆத்திரமாகப் பேசியுள்ளார்.

அண்ணாமலையின் பேச்சு குறித்து கருத்து கூறிவரும் நெட்டிசன்களில் சிலர் செய்தியாளர் கேட்டது தவறான கேள்வி என்று சொல்கின்றனர். மற்றொரு தரப்பினர், செய்தியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!