டிஎஸ்பி-யை வம்பில் இழுத்து விட்டாரா அமைச்சர் கே.என். நேரு… பதவிக்கும் ஆபத்தா…? திமுகவுக்கு புதிய தலைவலி…!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 7:33 pm
Quick Share

கே.என்.நேரு

திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு பொதுவெளியில் பேசும்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.

KN Nehru - Updatenews360

திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த மே மாதம் திருச்சியில் நடந்தபோது அதில் பேசிய நேரு, ‘நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள். இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எம்எல்ஏ பேசுவார்’ என்று கிண்டலடித்தார்.

தங்களை மூத்த அமைச்சர் ஒருவரே அடிமைகள் என்று கூறியதை கேட்டு, கூட்டத்தில் இருந்த திமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திமுக மாவட்ட நிர்வாகிகளும் நேருவின் பேச்சால் ஷாக் ஆகினர். இதை நொடிப் பொழுதில் உணர்ந்த அமைச்சர் பொன்முடி, ‘நேரு எப்போதும் இப்படி தான். ஆனால் என்னை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்று கூறி சமாளித்தார்.

மேயர் அவமதிப்பு

மிக அண்மையில் 383-வது சென்னை தினம் மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது, இதையொட்டி செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது, அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப தயாராக இருந்தனர். 

முன்னதாக மேயர் பிரியா மற்றும் அமைச்சர் நேருவை அவர்கள் போட்டோ எடுத்தனர், அப்போது மேயர் பின்னால் சென்றார். அங்கிருந்த அமைச்சர் நேரு, “யம்மா இங்க நிப்பியா” என அதட்டியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கையில் வைத்திருந்த பேப்பரை படிக்கட்டுமா? என்று நேருவிடம் பிரியா கேட்க, அதற்கு அவர் ஏம்மா…சொல்லுமா? என்று குரலை உயர்த்தி கோபமாக கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பெருநகர மேயர் பிரியாவை அமைச்சர் நேரு ஒருமையில் பேசியதாக கூறப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இதனால் அமைச்சர் நேருவுக்கு எதிராக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர், பட்டியலின பெண் என்பதால் மேயர் பிரியாவை திமுக அவமதிக்கிறது, இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று பலரும் கொதித்து எழுந்தனர்.

தனக்கு எதிராக எழுந்த விமர்சனத்திற்கு அமைச்சர் நேரு விளக்கம் அளித்து கூறுகையில், “பிரியா எனக்கு மகள் போன்றவர், அந்த அர்த்தத்தில்தான் அவரிடம் உரிமையோடு பேசினேன், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று மேயர் சொன்னார். அதனால் எனது இருக்கையை கொடுத்துவிட்டு விலகிச் சென்று அமர்ந்தேன், இதில் எந்த ஆணாதிக்கமும் இல்லை, சாதிய பாகுபாடும் இல்லை” என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

டிஎஸ்பி குறித்து சர்ச்சை

இந்த சர்ச்சையில் இருந்து அவர் விடுபடுவதற்குள், திருச்சியில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் நேரு தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு கடந்த ஓராண்டில் அவர் பேசிய சர்ச்சை பேச்சுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல இது அமைந்துவிட்டது.

தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு விஸ்வரூபமும் எடுத்துள்ளது.

திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் உள்ள ஒரு ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு வந்திருந்த ஒரு டிஎஸ்பியை பார்த்து சிரித்துக்கொண்டே அமைச்சர் நேரு ஒரு தகவலை சொன்னார்.

அப்படி அமைச்சர் என்னதான் பேசினார்?…

“இந்த டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது எனக்கு பாதுகாப்பு பணி செய்தார். அவருக்கு இருக்கக்கூடிய திறமை என்னவென்றால் என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவர் விரும்பினால், ஒருவரை குற்றவாளியாக்குவார் அல்லது ஒருவரை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்குவார். அவர் எங்களுடன் வளர்ந்தவர். அதனால் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த கருத்து தமிழக காவல்துறையின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தை எழுப்பி பலத்த விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

ஏற்கனவே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவது திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் இன்று காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. அதன் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதனால்தான் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன” என்று குற்றம்சாட்டி வரும்நிலையில் அதை ஆம் இது உண்மைதான் என்று ஒப்புக்கொள்வதுபோல அமைச்சரின் இந்த கருத்து அமைந்து இருக்கிறது என்றே கருதத் தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, ஒருவரை குற்றவாளியாகவும் ஆக்கவும் முடியும், குற்றவாளி பட்டியலில் இருந்து எடுக்கவும் தெரியும். எங்களோடு வளர்ந்தவர் அமைச்சர் என்று கூறியதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த செயல்பாட்டை அமைச்சர் வரவேற்று பேசியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பாஜக கண்டனம்

இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில்” அமைச்சர் ஒரு கூட்டத்தில் காவல் துறை எப்படி இயங்குகிறது, காவல் துறையினர் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை ஒரே வரியில் உரைத்து, ‘அவர் எங்களுடன் வளர்ந்தவர்’ என்பதையும் குறிப்பிட்டு, கழக அரசியல் காவல் துறையை சீரழித்த வரலாற்றை சுருக்கமாக சொல்லி விட்டார். அரசு துறைகளில் கழக அரசியல் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை படம் பிடித்து காட்டியுள்ளார். அவர் இதை பேசும்போது கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது என்பதே திராவிட மாடலின் அவலம்” என்று கேலி செய்து இருக்கிறார்.

அமைச்சர் நேருவின் இந்த பேச்சு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்” என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

“ஏனென்றால் முதலமைச்சர்தான் காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அதனால் அமைச்சர் நேருவின் கருத்தால் ஸ்டாலினுக்கு இக்கட்டான சூழல் எழுந்துள்ளது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் உலா வரும், அமைச்சரின் பேச்சு வீடியோவுக்கு நேரு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று திமுகவினர்
பதிலடி கொடுத்தாலும் கூட அது மக்களிடம் அவ்வளவாக எடுபடாது. ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இது போன்ற போலீஸ் அதிகாரிகளை வைத்தே தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கம்பி எண்ண வைத்துவிடுவார்கள். தங்கள் இஷ்டம் போல் குற்றவாளிகளை தப்ப விட்டும் விடுவார்கள் என்ற எண்ணம்தான் பரவலாக தமிழக மக்களிடம் ஏற்படும்.

அதனால் காவல் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை அடியோடு தகர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காவல் நிலையம் செல்லவும் தயங்குவார்கள்.

அமைச்சர் நேரு இதற்கு முன்பு பேசிய விவகாரங்கள் எல்லாம் அவருடைய கட்சிக்கு உட்பட்டவை. அதனால்தான் அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட அடுத்த சில நாட்களில், அப்படியே அமுங்கிப் போய்விட்டது. ஆனால் அவர் தற்போது கூறியிருக்கும் விஷயமோ காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதனால் அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

திமுக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நேரு சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாக இப்படி பேசி இருக்கிறார் என்றுதான் கருதத் தோன்றுகிறது

ஏனென்றால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தே திமுக அரசுக்கு தொடர்ந்து கடும் குடைச்சலை கொடுப்பார்கள் என்பது நிச்சயம்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 1626

0

0