பாஜகவின் மோசமான அரசியலை உலகில் எந்த கட்சியும் செய்யாது.. இது அப்பட்டமான ஏமாற்று வேலை : அமைச்சர் மனோதங்கராஜ்..!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 12:02 pm

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிறகு தான் வரும் என கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் விளையும் கிராம்பு, மட்டி ,வாழைப்பழம், மார்த்தாண்டம் தேன் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மார்த்தாண்டம் தேனிற்கு புவிசார் குறியீடு கிடைத்ததற்கான விழா மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அவர் கூறியதாவது :- இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகி இருக்கிறது என்று கூற முடியாது. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அவர்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கிறது.

அதன் அடிப்படையில் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளார்கள். ஆனால் தொகுதி பங்கீடு செய்ய அவர்கள் தயாராவார்கள். இதனால், இந்தியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தற்பொழுது மோடி அரசு செய்யும் அப்பட்டமான ஏமாற்று வேலை. மகளிருக்கான இட ஒதுக்கீடு கொடுப்பது என்றால், அதை உடனே செய்ய வேண்டியது தானே?

யாரிடமும் சொல்லாமல் செக்குலர் சோசியலிசம் என்ற வார்த்தையை நீக்கியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேறும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாதா? அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இல்லையா..? எப்போது தேர்தலை வைத்தாலும் அதை நடத்த தயார் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஏன் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் மட்டும் 2029க்கு பிறகு வரவேண்டும். இது பாஜகவின் தேர்தல் யுக்தி. அதிமுக, பாஜக கூட்டணி விவகாரத்தை பொருத்தவரையில், அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.

அதிமுக, பாஜக கூட்டணி முதலில் இரட்டை குழல் துப்பாக்கி என்றார்கள். இப்போது அது மூன்று குழல் துப்பாக்கியாக மாறி இருக்கிறது. அதிமுகவை தற்பொழுதும் பாரதிய ஜனதா தான் இயக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இருக்கிறது. இது பிறருக்கு தேவைப்படும் எனக் கூறி அதிமுகவை மிரட்டி, தங்கள் கையில் பாஜக வைத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. இதைப் போன்ற மோசமான அரசியலை உலகில் எந்த கட்சியும் செய்யாது, என அவர் தெரிவித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!